நரிக்குறவர்கள் சமுதாயத்தினரை மதம் மாற்ற சதி: ஹிந்து முன்னணி
திருப்பூர்:“நரிக்குறவர் சமுதாயத்தை மதம் மாற்ற திட்டமிட்ட சதிக்கு, தமிழக அரசு துணை போகிறது,” என்று ஹிந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
சுடுகாடு
பிரச்னை பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட ஹிந்து நரிக்குறவர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களிடம் தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றி வருகின்றனர். மதமாற்றம் காரணமாக, கிராமத்தில் பல ஆண்டுகளாக சுடுகாடு பிரச்னை இருக்கிறது. சில தினங்களுக்கு முன், கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய குடும்பத்தில் இருந்த ஹிந்து பெண் இறந்து விட்டார். அவரது கடைசி ஆசை, ஹிந்து முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பது. ஆனால், அவருடைய குடும்பத்தினர் மதம் மாறியதால், 'கிறிஸ்துவ முறைப்படி தான் அடக்கம் செய்வோம். சிலுவை நடுவோம்' என பிரச்னை செய்துள்ளனர். ஒட்டுமொத்த ஹிந்து நரிக்குறவர் சமுதாய மக்களும் எதிர்த்து போராடினர். இதன் விளைவாக, ஹிந்து முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது. வலுக்கட்டாயம்
ஹிந்து மக்களுக்காக குரல் கொடுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக, அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஹிந்து முன்னணி பெரம்பலுார் மாவட்ட செயலர் செல்வகுமாரை, காவல்துறை வலுக்கட்டாயமாக அதிகாலையில் கைது செய்துள்ளது. எறையூர் மற்றும் மதுராபுரி உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர் சமுதாயத்தினர் குறிவைக்கப்பட்டு, கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உரிமைக்காக போராடிய நரிக்குறவர் சமுதாய இளைஞரை, 15 கி.மீ., தாண்டி ரோட்டை மறித்ததாக பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். இப்படி பொய் வழக்கு போட்டு, நரிக்குறவர் சமுதாய மக்களை மிரட்டுவது தொடர்கதையாகி உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
போலீசாருக்கு சங்கம் வேண்டும்
உடுமலை, குடிமங்கலத்தில்நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, ஹிந்து முன்னணி மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் பேசியதாவது: பொதுமக்களுக்காக, இரவு, பகல் பராமல் போலீசார் வேலை செய்கின்றனர். ஆனால், சிலர் போலீசார் மரணத்தில் அரசியல் செய்கின்றனர். இறந்த சண்முகவேல், பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர். இதுவரை எந்த அரசியல் பிரமுகர், ஜாதி சங்கத்தினர் போராட முன் வந்தனர்? மரணத்தை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதேபோல, எஸ்.ஐ., வில்சனை அன்று வெட்டி கொன்றனர். யாரும் குரல் கொடுக்கவில்லை. ஹிந்து முன்னணி தான் போராடியது. என்றைக்கும் தேசத்துக்காக வேலை செய்பவர்களுக்கு உடன் நிற்போம். ராணுவத்துக்கும், போலீசாருக்கு பிரச்னை வந்தால், நாங்கள் முன்நிற்போம். ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு சங்கம் இருக்கும் போது, ஏன் போலீசாருக்கு சங்கம் இருக்கக்கூடாதா? கோரிக்கையை தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கும் சங்கம் வேண்டும். அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். மக்கள் உங்களுடன் இருப்பார்கள். நேர்மையாக பணியாற்றுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.