உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சட்டசபை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை:'பார்லிமென்ட் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் போது, சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதில் என்ன பிரச்னை' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்; லோக் சத்தா கட்சியின் தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கில், தன்னையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரி, அ.தி.மு.க., கொறடா வேலுமணியும் மனுத் தாக்கல் செய்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தலைமையிலான, நேற்று விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் மரணம் குறித்தும், அவரது சட்டப்பூர்வ பிரதிநிதி வாயிலாக, வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாகவும், வழக்கறிஞர் வி.டி.பாலாஜி தெரிவித்தார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''சட்டசபையில் கவர்னர் உரை, பட்ஜெட் உரை, கவன ஈர்ப்பு தீர்மானங்கள், அமைச்சர்களின் பதில், நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ''உறுப்பினர்களின் பேச்சுக்கள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படும் போது, நேரடி ஒளிபரப்பில் அவையும் வெளியாக வாய்ப்பு உள்ளதால், சபை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது,'' என்றார்.இதையடுத்து, பார்லிமென்ட் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் போது, சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை உள்ளது; சபை குறிப்பில் இருந்து நீக்கம் இருந்தால், 10 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பலாமே என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து, அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, மார்ச் 11க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை