| ADDED : பிப் 06, 2024 03:06 AM
மதுரை: 'தனியார் பட்டா நிலத்தில் சிலையை நிறுவ அரசு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டம் முஷ்டக்குறிச்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் கந்தவேல் தாக்கல் செய்த மனு:அறக்கட்டளைக்கு சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. அவ்வளாகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வெண்கலச் சிலையை நிறுவ அனுமதி கோரி, தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலர், ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்தோம்.எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.அரசு தரப்பில், 'அவ்வப்போது வெளியாகும் அரசு ஆணைகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அரசிடம் அனுமதி பெறாமல் சிலையை நிறுவ முடியாது' என தெரிவித்தது.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத்தில் சுதந்திர போராட்ட தலைவரின் சிலையை நிறுவ மனுதாரர் விரும்புகிறார். பட்டா நிலத்தில் சிலையை நிறுவ அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை.ஒருவர் பொது வழிபாட்டிற்காக மத வழிபாட்டுத்தலம் அமைக்க விரும்பினால், கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். சிலைகளை நிறுவுவது தொடர்பாக அத்தகைய சட்டம் அல்லது விதிகள் இல்லாததால், சிலையை நிறுவும் ஒருவரின் உரிமையை முடக்க அல்லது குறுக்கிட முடியாது.இவ்வழக்கில் சமுதாயக்கூட வளாகத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையை திறக்க மனுதாரருக்கு உரிமை உள்ளது.இவ்வாறு உத்தரவிட்டார்.