மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 11
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
மதுரை:''அரசியலில் பெண்களின் அறிவு, குணம், ஆற்றலை பார்க்கமாட்டார்கள். உயரமா, நிறமா, அழகா என்று தான் பார்ப்பர். பெண்களாகிய நீங்கள் உள்ளே எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்,'' என, மதுரையில் கேசவ சேவா சங்கம் நடத்திய சக்தி சங்கமம் நிகழ்ச்சியில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேசினார்.தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேசியதாவது:ஒவ்வொரு பெண்ணும், ஆயிரம் ஆண்களுக்கு சமமானவர்கள். பெண்கள் தங்களை மகிழ்விக்காமல், திருப்திப்படுத்தாமல், மற்றவர்களையும் உலகத்தையும் மாற்ற முடியாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், வீடும், நாடும் மகிழ்ச்சியாக இருக்கும். அரசியலுக்கு பெண்கள் அதிகமாக வர வேண்டும். மலர் பாதையல்ல
அதற்காகவே, பிரதமர் மோடியின் முயற்சியால் லோக்சபா, ராஜ்யசபாவில் இடஒதுக்கீடு மசோதா தாக்கலானது. பலமுறை பல கட்சிகள் ஆட்சியில் இருந்தும், இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.ஒரு பெண், வாழ்க்கையில் முன்னேறுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. நம் பாதை மலர் பாதை அல்ல. இங்கே கவர்னராக நிற்பதற்கு முன், எவ்வளவு கடுமையான பாதையை கடந்து வந்தேன் என்று உங்களுக்கு தெரியும்.இங்கே நம் அறிவையோ, குணத்தையோ ஆற்றலையோ பார்க்க மாட்டார்கள். நிறத்தையும், உயரத்தையும், அழகையும், மிளிர்கிறோமோ என்று தான் பார்ப்பர். வெளித்தோற்றம் என்பது வீணான தோற்றம்.உள்ளே எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். வெளித்தோற்றத்தை மற்றவர்கள் எவ்வளவு பரிகசிக்கின்றனரோ, அந்தளவு உள்ளுக்குள் நாம் சக்தி மிகுந்தவர்களாக பரிணமிக்க வேண்டும். கவிதை படித்தேன்
நிர்வாக திறமை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம். பெண்களால், பெண்களையும் ஆண்களையும் சமாளிக்க முடியும். ஆண்களால் பெண்களை சமாளிக்க முடியாது. சமையலில் அவியல் செய்வதோடு, அரசியல் செய்யவும் முடியும். 'தினமலர்' நாளிதழின் வாரமலர் புத்தகத்தில் வெளியான ஒரு கவிதையை படித்தேன். அந்த கவிதை, 'நீ மனுஷியாவது எப்போது' என்று முடியும். அதேபோல பெண்கள் சக்தி உள்ளவர்களாக சந்தோஷமான மனுஷியாக மாறி சாதனை படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசும் போது, தமிழிசை கூறிய குட்டிக்கதை: நாத்திகரான ஒரு தம்பி, கடவுள் நம்பிக்கை உள்ள பெண்ணை திருமணம் செய்தார். நாம் ஏன் வடநாட்டு கதையைச் சொல்ல வேண்டும். தமிழகத்தில் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உடனே, தமிழக முதல்வரை தான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.நாத்திகம் பின்பற்றும் அந்த தம்பியிடம் அவரது மனைவி சொல்கிறார், 'என் மத நம்பிக்கையில் குறுக்கிடக் கூடாது' என்று. முதல் நாள் கோவிலுக்கு கணவரை அழைக்கிறாள். அவர் தான் நாத்திகர் ஆயிற்றே, வரமறுத்து விட்டார்.தனியாக கோவிலுக்கு போன புது மனைவி அழுது கொண்டே வருகிறார். 'ஏன் அழுகிறாய்' என தம்பி கேட்க, 'தனியாக போவதால் சில காலிப்பசங்க என்னை கிண்டல் செய்தனர்' என்றார்.மறுநாள் மனைவி கேட்க, 'கோவில் வாசலில் நிற்கிறேன்' என்று தம்பி சொன்னதும், தன் காலணியை கழட்டி ஓரமாக வைத்து விட்டு, அதை பார்த்துக் கொள்ள சொன்னார் மனைவி.தம்பி பதறிப்போனார். கோவிலுக்கு வெளியே நின்றால், நீயும் காலணியும் ஒன்று தான் என்பது போல மனதுக்குள் நினைத்துக் கொண்ட மனைவி கோவிலுக்குள் சென்றார். அதே காலிப்பசங்க இந்த முறை தம்பியை பார்த்து, 'ஓஹோ… பெண்டாட்டி காலணியை பார்த்துக் கொள்ளத்தான் வந்தாயா' என்று கேலி செய்தனர்.அதற்கு அடுத்த நாள், 'வாசல் வரைக்கும் வந்துட்டீங்கள்ல… உள்ளே வர்றீங்களா'… என்று மனைவி கேட்கிறார். 'வெளியே காலணியை பார்த்துக் கொள்வதை விட, இது நல்ல வேலை தான். சுவாமி கும்பிட வேண்டாம்' என நினைத்து, 'அட்டென்ஷனில்' நிற்கிறார் நாத்திகத் தம்பி.கோவிலில், அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கும் போது மனைவி உருகி நின்று வழிபட, தன்னை அறியாமல் அந்த தம்பியும் கையை தானாக துாக்கி இறைவனை பிரார்த்திக்கிறார். இது தான் மனைவியின் அன்பும், அவனை அறியாமல் அவன் மீது செலுத்தும் அதிகாரமும்.நாத்திகரை ஒரு மனைவி எவ்வளவு இலகுவாக மாற்றினார் என்பது தான் நடந்த கதை. கொள்கைகளால் மாறுபட்டவர்களை கூட மாற்றும் சக்தி பெண்களிடம் இருக்கிறது என்பதை இதன் மூலம் உணர்த்துகிறேன். இவ்வாறு தமிழிசை கூறினார்.
3 hour(s) ago | 11
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3