| ADDED : ஜன 02, 2024 11:24 PM
அயோத்தி:''அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதும், அதைத் தொடர்ந்து லோக்சபா தேர்தல் நடத்தப்பதும் நாட்டுக்கு நன்மை விளவிக்கும் விதமாக அமையும்,'' என, ராமர் கோவில் தலைமை பூஜாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறினார்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 22ல் நடக்கிறது. இதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கு முன்னதாக, ராமர் கோவில் திறக்கப்படுவது, தேர்தலில் முக்கியப் பங்கை வகிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் ராமர் கோவில் தலைமை பூஜாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நேற்று கூறியதாவது:வரும் 22ம் தேதி, அயோத்தி ராமர் கோவில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு நம் நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்தாண்டில், ராம ராஜ்யம் அமையப் போகிறது. இதனால், அமைதி மட்டுமல்ல, துக்கம், வலி, பதற்றம் நீங்கி அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர்.ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இவை அனைத்தும் நாட்டுக்கு நன்மை பயக்கும் விதமாக அமையும். அயோத்தியில் தற்போது பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. விமானம் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.