சென்னை:ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன், பாஸ்போர்ட் பெற நேர்காணலில் இன்று பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை முடித்து வைத்தனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் கைதியாக சிறையில் இருந்த முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இலங்கையை சேர்ந்தவர் என்பதால், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் முருகன் வைக்கப்பட்டார்.பாஸ்போர்ட் பெற, சென்னையில் உள்ள இலங்கை துாதரகத்துக்கு சென்று நேர்காணலில் பங்கேற்க முருகனுக்கு அனுமதி வழங்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி நளினி மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது நேர்காணலில் முருகன் பங்கேற்க ஏதுவாக, துாதரகத்தில் முன்அனுமதி பெற, திருச்சி கலெக்டர் முயற்சிகள் எடுக்கவும், அதுகுறித்து அறிக்கை அளிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆஜராகினர். திருச்சி கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில், இலங்கை துாதரகத்தில், இன்று நேர்காணலுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''சென்னைக்கு முருகனை அழைத்துச் செல்ல, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.இன்று நேர்காணலுக்கு துாதரகம் அனுமதி வழங்கியிருப்பதாலும், முருகனை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாலும், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் தேவையில்லை எனக்கூறி, வழக்கு விசாரணையை, நீதிபதிகள் முடித்து வைத்தனர்.