உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வனப்பகுதிகளின் மண் வளம் அறிய புதிய தகவல் தொகுப்பு அறிமுகம்

வனப்பகுதிகளின் மண் வளம் அறிய புதிய தகவல் தொகுப்பு அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வனப்பகுதிகளின் மண் வளம் அறிவதற்கான, புதிய ஆன்லைன் தகவல் தொகுப்பை, சென்னை அண்ணா பல்கலையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலையின் காலநிலை மாற்ற, பேரிடர் மேலாண்மை மையம் சார்பில், நிலங்களில் கரியமில வாயு இருப்பு குறித்த கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. கருத்தரங்கில், வனப்பகுதிகளின் மண் வள நிலவரம் அறிவதற்கான புதிய ஆன்லைன் தகவல் தொகுப்பை, வனத்துறை செயல் திட்டங்கள் பிரிவுக்கான முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வீரேந்திர சிங் மாலிக் துவக்கி வைத்தார். இத்தகவல் தொகுப்பை உருவாக்கிய அண்ணா பல்கலை பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் பேசியதாவது: கரியமில வாயு உமிழும் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மண்ணில் கரியமில வாயு இருப்பை அதிகப்படுத்தினால் மட்டுமே, வளி மண்டலத்தில் கரியமில வாயுவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதற்கு நிலத்தை வளப்படுத்த வேண்டும். விவசாய நிலத்தில் கரியமில வாயு இருப்பை அதிகரிப்பது சாத்தியம்இல்லாததால், வனப்பகுதி நிலங்களில் கரியமில வாயு சேகரிப்பை அதிகரிக்க வேண்டும். இதற்கு, அதிக மரங்கள் நடுவது மட்டுமின்றி, மண் அடுக்கில் மட்கும் பொருட்களை சேர்க்கவும் வேண்டும். இதற்காக, தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக, நல்ல நிலையில் உள்ள வனப்பகுதி, வளம் குன்றிய வனப்பகுதி ஆகியவற்றின் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டன. ஒவ்வொரு பகுதியிலும் கரியமில வாயு இருப்பு, தேவைப்படும் அளவு போன்ற விபரங்கள், ஆன்லைன் தகவல் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் தமிழக வனத்துறை இணையதளத்தில் இணைக்கப்படும். எந்த மாவட்டத்தில் வளம் குன்றிய வனப்பகுதி அதிகரித்துள்ளது என்பதை, பொது மக்கள் அறிய உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை தலைவர் சுப்ரத் மொகோபத்ரா, தலைமை வன உயிரின பாதுகாவலர் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, வனத்துறையின் உயர் சிறப்பு கல்வி நிறுவன இயக்குனர் ஏ.உதயன், வனத்துறை சிறப்பு செயலர் அனுராக் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திடக்கழிவு பிரச்னைக்கு தீர்வு நிலத்தில் கரியமில வாயு இருப்பை அதிகரிக்க, மட்கும் கழிவுகளை பயன்படுத்துவது நல்ல தீர்வாக இருக்கும். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தினமும், 17,000 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில், 8,000 டன் கழிவுகள் மட்கும் தன்மை உடையவை. இந்த கழிவுகளை அழிப்பது, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சவாலாக உள்ளது. வனத்துறையுடன் நகர்ப்புற உள்ளாட்சிகள் கைகோர்த்தால், இக்கழிவுகளை பயன்படுத்தி வனப்பகுதி நிலங்களை வளப்படுத்த முடியும். - குரியன் ஜோசப்இயக்குனர், அண்ணா பல்கலை காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம்

3,053 சதுர கி.மீ., வனப்பகுதிக்கு ஆபத்து

தமிழகத்தில் பசுமை காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளின் மொத்த பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், காடுகள் வளம் குன்றிய முட்புதர்களாக மாறி வருகின்றன. வரும் 2050ல் பசுமை காடுகள், இலையுதிர் காடுகள் பரப்பளவு வெகுவாகக் குறையும் என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ