சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக செல்லாமல், மாவட்ட அலுவலகங்களில் அமர்ந்து, மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக் கெடுப்பு நடத்தும் ஊழியர்களால், இதன் செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை அறிய கணக்கெடுக்கும் பணி, கடந்த ஆண்டு ஆக., மாதம் துவங்கியது. உலக வங்கி நிதி உதவியுடன், இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் வாயிலாக, புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை, கல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் அரசின் சேவைகள் கிடைக்கச் செய்வது தான் நோக்கம். அதன்படி, கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள, தலா ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு, 14 ஊழியர்கள் என, மாவட்டம்தோறும் 300 முதல் 400 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை, சேலம் உட்பட பல மாவட்டங்களில், கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், நேரடியாக வீடுகளுக்கு செல்லாமல், மாவட்ட அலுவலகத்தில் அமர்ந்து, மொபைல் போன் வழியாக மாற்றுத்திறனாளிகளை தொடர்பு கொள்கின்றனர். ஆவணங்களை, 'வாட்ஸாப்' செயலியில் அனுப்புமாறும் கூறி வருகின்றனர். இதுகுறித்து, பார்வையற்றோருக்கான சுய தொழில் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்லமுத்து கூறியதாவது: தமிழ்நாடு உரிமைகள் திட்டம் துவங்கி, ஓராண்டாகியும் பணிகள் முடியவில்லை. இப்பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஊழியர்களும், முழு ஈடுபாட்டுடன் பணியாற்றவில்லை. மாறாக, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து, மாற்றுத்திறனாளிகள் தரவுகளை பெறுகின்றனர். பின்னர், அவர்களை மொபைல் போனில் அழைத்து, கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.