குடும்பத்திற்காக தொழில் கொள்கை தி.மு.க., அரசு வெளியிடுவது அவமானம்: அண்ணாமலை, தினகரன் கண்டனம்
சென்னை:'குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில், ஒரு தொழில் கொள்கையை, தி.மு.க., அரசு வெளியிடுவது அவமானம்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் மருமகன், விண்வெளி தொழில்நுட்ப 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை துவக்கியதில் இருந்தே, விண்வெளி தொழில் கொள்கை எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தின் நிழல் முதல்வர் சபரீசன், 2024 ஜூலை 22ல் துவக்கப்பட்ட, 'வானம் ஸ்பேஸ் எல்.எல்.பி.,' நிறுவனத்தின் பங்குதாரர் ஆவார்.இந்நிறுவனம், 20 சதவீத மூலதன மானியத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விண்வெளி தொழில் கொள்கையை, கோபாலபுரம் குடும்ப தொழில் கொள்கை என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். முதலீடுகள் இல்லாததால், மாநிலம் தவித்து வருகிறது. புதிய முதலீடுகளுக்கு போராடி வருகிறது. சர்வாதிகார அரசு, அவரது குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில், ஒரு தொழில் துறை கொள்கையை வெளியிடுகிறது. இது அவமானம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விண்வெளி கொள்கைமக்களுக்கு சந்தேகம்
தமிழக விண்வெளி தொழில் கொள்கை, விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தவா; முதல்வர் குடும்பத்தின் வருமானத்தை பெருக்கவா? ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில், விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த எந்தவித முன்னெடுப்பையும் எடுக்காத தி.மு.க., அரசு, முதல்வரின் குடும்பத்தை சார்ந்த ஒருவர், விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த நிறுவனத்தை துவக்கிய பின், விண்வெளி கொள்கையை வெளியிட்டிருப்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் குடும்பத்தை சேர்ந்த தனிநபர் ஒருவருக்காக, அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது, எந்த வகையில் நியாயம்? தி.மு.க., ஆட்சிக்கும், மக்கள் முடிவுரை எழுத்த போவது உறுதி.தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,