தமிழக முதல்வர் ஸ்டாலின்: குஜராத் சகோதரி பில்கிஸ் பானு வழக்கில், இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில், நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ., அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என, உச்ச நீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் லாபங்களுக்காக, நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.டவுட் தனபாலு: நல்லது... மதுரையில, மா.கம்யூ., கவுன்சிலர் லீலாவதி கொலையில் தொடர்புடைய தி.மு.க.,வினரை, உங்க தந்தை கருணாநிதி முதல்வராக இருந்தப்ப, முன்கூட்டியே விடுதலை செய்தாரே... அந்த சம்பவத்தில் மட்டும் நீதி நிலைநாட்டப்பட்டதா என்ற, 'டவுட்' எழுதே!பத்திரிகை செய்தி: கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், வடசென்னை, விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட்டது. அந்த கட்சியை மீண்டும் கூட்டணிக்குள் இழுக்க, அ.தி.மு.க., முயற்சிகளை துவங்கியுள்ளது.டவுட் தனபாலு: அ.தி.மு.க., ரயில் இப்ப காலியா தான் நிற்குது... இப்பவே, அதுல போய் தே.மு.தி.க., ஏறிக்கொண்டால், அவங்க கேட்கிற பர்த்கள், அதாவது சீட்கள் கண்டிப்பாக கிடைச்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!ரயில்வே தொழிற்சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ., பொதுச் செயலர் கண்ணையா: ரயில்வேயை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் போராட்டத்தில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. மக்களுக்காகவும், மத்திய அரசு ஊழியர்களுக்காகவும் தான், போராட்டம் நடத்தி வருகிறோம்.டவுட் தனபாலு: அரசியல் உள்நோக்கம் இல்லை என்கிறீங்க... அப்புறம் ஏன், லோக்சபா தேர்தல் நெருங்குற நேரமா பார்த்து, இந்த போராட்டத்தை நடத்துறீங்க என்ற, 'டவுட்' வருதே!