உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடி பற்றி பேச கனிமொழிக்கு தகுதி இல்லை

மோடி பற்றி பேச கனிமொழிக்கு தகுதி இல்லை

சென்னை:''தந்தை பெயரை வைத்து வாழ்ந்து வரும் கனிமொழிக்கு, பிரதமரை பற்றி பேச தகுதி கிடையாது, '' என , தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:எல்லா நாளையும் பெண்களுக்கான நாளாகவே பார்க்கிறேன். மகளிர் தின வாழ்த்துக்களை தனியாக தெரிவிக்க வேண்டும் என்று இல்லை.ஒரு காலத்தில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பேசியது எல்லாம் மாறி, இப்போது பெண்கள் தான் இந்தியாவை முன்னின்று வழிநடத்தி வருகின்றனர். நம் சகோதரிகள் மென்மேலும் வளர வேண்டும்; அதற்கு என் வாழ்த்துக்கள்.

குறைக்கவில்லை

மோடி சிலிண்டர் வாயிலாக இணைப்பு பெற்றவர்களுக்கு, 300 ரூபாய் மானியமாக இருந்தது. அது, தற்போது 400 ரூபாயாக மாறி உள்ளது. மற்றவர்களுக்கு, 200 ரூபாய் மானியமாக இருந்தது, 300 ரூபாயாக மாறி உள்ளது.ஆனால், தமிழகத்தில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், காஸ் சிலிண்டர் விலையை, 100 ரூபாய் குறைப்போம் என்று கூறினர். இதுவரை எதுவும் குறைக்கவில்லை. பிரதமர் மோடி தான், தற்போது சிலிண்டர் விலையை குறைத்துள்ளார்.கனிமொழி, அவரது தந்தை வீட்டில் உள்ளார். சொந்தமாக சம்பாதித்து, காடுமேடு சென்று விவசாயம் பார்த்து சம்பாதித்தாரா? முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் என்பதை வைத்து, ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படி ஓசியில் வாழும் கனிமொழிக்கு, பிரதமரை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

எத்தனை வழக்குகள்

கனிமொழி என்ன உழைக்கிறார்? தந்தை பெயரை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்? அவர், பிரதமரை பார்த்து, சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என சொல்வதற்கு முன், ஒரு முறை கண்ணாடியில், தன் முகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.எத்தனை வழக்குகள் உள்ளன? எத்தனை முறை சிறை சென்றுள்ளார் என்பதையும் ஒரு முறை யோசிக்க வேண்டும். கனிமொழி இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும். பிரதமரை பற்றி பேசுவதற்கான, அரை சதவீதம் தகுதி கூட அவருக்கு இல்லை.போதைப் பொருள் விவகாரத்தில் தமிழக டி.ஜி.பி.,யை, பலிகடா ஆக்குவதற்கு, தி.மு.க., முயற்சிக்கிறது. தி.மு.க., தான் இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும். ஜாபர் சாதிக் தி.மு.க.,வின் அயலக அணியில் இருந்தபடி, வெளிநாட்டில் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் வாயிலாக போதை பொருளை விற்பனை செய்துள்ளார். இதற்கு தி.மு.க., பதில் அளிக்க வேண்டும். டி.ஜி.பி., ஏன் பேச வேண்டும்? இது தேவையற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருக்கு நன்றி

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை:சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாட்டில் பல கோடி பெண்கள் பயன்பெறும் வகையில், சமையல் காஸ் சிலிண்டரின் விலை, 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள், தமிழக பா.ஜ., சார்பில் நன்றி.மேலும், 10 கோடி பிரதமரின் இலவச காஸ் இணைப்பு பயனாளிகளுக்கு வழங்கப்படும், 300 ரூபாய் மானியம், 2025 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புகள், தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், பிரதமர் மோடியின் சிறந்த மகளிர் தின பரிசாக அமைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ