உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதம்பாக்கத்தில் இடிந்து விழுந்த எம்.ஆர்.டி.எஸ். மேம்பாலம் போக்குவரத்து தடையால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு

ஆதம்பாக்கத்தில் இடிந்து விழுந்த எம்.ஆர்.டி.எஸ். மேம்பாலம் போக்குவரத்து தடையால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு

சென்னை:எம்.ஆர்.டி.எஸ். எனும் சென்னை மேம்பால திட்டத்தில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை, 5 கி.மீ துாரம் மேம்பால ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்த, 2008ல் தென்னக ரயில்வே திட்டமிட்டது. பல்வேறு காரணங்களால், 13 ஆண்டுகள் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. முதலில் 495 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்ட இத்திட்டம், நீண்ட கால இழுபறியால் 730 கோடியாக உயர்ந்தது. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மேம்பால ரயில் திட்டப் பணிகள் துவங்கி துரிதமடைந்தன.தற்போது, ஆதம்பாக்கம் - -பரங்கிமலை இடையே பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனரகத்தின் ஒப்புதல் பெற்று, ரயில் சேவையை துவக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.ஆதம்பாக்கம்- - பரங்கிமலை இடையே, 157- - 158வது துாண்களுக்கு இடையே ஒரு மாதம் முன் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில், சில நாட்களுக்கு முன் இரும்பு சாரம் அகற்றப்பட்டது. அந்த மேம்பாலப் பகுதி, பாரம் தாங்காமல் நேற்று திடீரென பெரும் சப்தத்துடன் விழுந்து சாலையில் மூன்று அடி பள்ளத்தை ஏற்படுத்தியது. பாலம் விழுந்த வேகத்தில் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டது. பக்கத்தில் உள்ள நடைபாதையும் சேதமடைந்தது. அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்ததாலும், மேம்பால திட்டப் பணிகள் எதுவும் நடக்காததாலும் உயிர் சேதம் ஏற்படவில்லை. சென்னை தெற்கு இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி இடத்தை பார்வையிட்டார்.

காரணம் என்ன?

மேம்பால ரயில் திட்டத்தில் உள்ள ஒவ்வொரு துாணும், 100 ஆண்டு வரை ஆயுட்காலம் கொண்டதாக கூறப்படுகிறது. ஆதம்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை வரை அமைக்கப்படும் துாண்கள், அதிக பட்சமாக 20 மீட்டரில் இருந்து 30 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுஉள்ளன.ஆனால், 157- - 158வது துாண்களுக்கு இடையே குறைந்த பட்சம் 45 -- -50 மீட்டர் துாரம் இடைவெளி உள்ளது. இதனால், பாரம் தாங்காமல் ஒரு பக்க துாணின் தாங்கும் பகுதி உடைந்ததால், பாலம் கீழே விழுந்து உள்ளது. இந்த மேம்பாலத்தை தாங்குவதற்காக துாணில், எண்ணெய் மற்றும் காற்றழுத்தம் மூலம் எடையைத் தாங்கக் கூடிய, 'ஹைட்ராலிக் சஸ்பென்ஷன்' கருவி பொறுத்தப்பட்டிருந்தது; இருந்தும் பாலம் உடைந்துள்ளது.

ரயில் சேவை தாமதமாகும்

மேம்பாலம் உடைந்து விழுந்ததால், ஆதம்பாக்கம்- - பரங்கிமலை இடையிலான அனைத்து பாலங்கள், துாண்களின் ஸ்திரத் தன்மையை மீண்டும் பரிசோதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அதேநேரம், 157- - 158வது துாண்களுக்கு இடையே பாதுகாப்பிற்காக புதிய துாண் அமைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில் சேவை துவங்குவது, மேலும் பல மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி