சென்னை:கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், எட்டு மாவட்டங்களில், 27 இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகசந்தேகப்படும் நபர்கள் பயன்படுத்திய மொபைல் போன், 'சிம் கார்டு'கள்,'ஆதார் கார்டு'கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ம் தேதி கார் குண்டு வெடித்து சிதறியது. அதில், உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த வழக்கை, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது.இதில், ஜமேஷா முபின், ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தால்ஈர்க்கப்பட்டு, கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது, என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்தது.விசாரணை
இந்நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் வஹ்ததே இஸ்லாமிய அமைப்பில் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில், என்.ஐ.ஏ.,அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது அட்டாவுல்லா பாட்ஷா, 40, வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.இவர், கட்சி ஒன்றில்வழக்கறிஞர் பிரிவுசெயலராக உள்ளார். இவரது மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள், ஆதார் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், வரும் 15ம் தேதி நேரில் ஆஜராகும்படி, 'சம்மன்' கொடுத்துள்ளனர்.சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசிக்கும் புடவை வியாபாரி ரியாஸ் அக்ரம், 68; பல்லாவரம் சோமசுந்தரம் தெருவைச் சேர்ந்த பைக் டாக்ஸி ஓட்டுனர் நவீத் கான், 44, ஆகியோர் வீடுகளிலும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற எஸ்.பி., சவுகத் அலியின் மகன், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வரும் சஹீல்; போத்தனுார் அண்ணாநகர் இரண்டாவது வீதியைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி நாசர், 30; தெற்கு உக்கடம் அல்மீன் காலனியைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானிக் அபிபுல்லா, 38, ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்தது.மேலும், தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானிக் அபிதாஹிர், 43; எலக்ட்ரிக் கடை நடத்தும் ரிஸ்வான், 31; மருந்து விற்பனை பிரதிநிதி சலாவுதீன், 42; மீன் வியாபாரி இம்ரான், 27; கரும்பு கடை மதீனா நகரைச் சேர்ந்த அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வரும் அப்துல் ரஷீத்; குனியமுத்துாரைச் சேர்ந்த பழ வியாபாரி முகமது சுதிர், 33; தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் ரகுமான் 42; தனியார் கல்லுாரி ஊழியர் முகமது அலி ஜின்னா ஆகிய 12 பேர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.அதேபோல, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஹாஜிமார் தெருவில் வசிப்பவர் அப்துல் அஜிம், 31. இவர்,வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவர். இவரது வீட்டிலும் சோதனைநடத்தப்பட்டது. திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள கூனிபஜார் பகுதியைச் சேர்ந்தஅஷ்ரப் அலி, 67; அவரது மகன் இப்ராஹிம் அலி, 27, ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.இவர்களிடம், கோவை குண்டு வெடிப்பு மற்றும் பாகிஸ்தானில் உறவினர்களை பார்க்கச் சென்று வந்தது தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளது.பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி முகைதீன் நகரைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது, 35. இவர், ஒரு அமைப்பில் மாநில செயலராக இருந்துவருகிறார். இவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கடலுார் என எட்டு மாவட்டங்களில், 27 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனையில்ஈடுபட்டனர்.சோதனையின் போது, சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரிக்க, வங்கி அதிகாரிகளையும் உடன் அழைத்து சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள், சிம் கார்டுகள், ஆதார், கணினிகள், புத்தகம் உள்ளிட்ட பல ஆவணங்களைபறிமுதல் செய்துள்ளனர். இதில் பலருக்கு, சென்னை என்.ஐ.ஏ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.