மேலும் செய்திகள்
ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் செல்வதில்லை
11-Dec-2024
சென்னை:தமிழகத்தில், '108 ஆம்புலன்ஸ்' சேவை, பயனாளிக்கு உரிய நேரத்தில் கிடைப்பதுடன், வாகன இருப்பிடத்தை அறியும் வகையில், வரைபட இணைப்புடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ், 'இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ்' நிறுவனம், 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுதும், 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதில், 302 வாகனங்களில், செயற்கை சுவாச கருவிகள் உள்ளன. அதேபோல், 40க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ்கள், மலை பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.தற்போது, சென்னையில் எட்டு நிமிடங்களிலும், மற்ற மாவட்டங்களில், 13 நிமிடங்கள் என்ற அளவில், 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைத்து வருகிறது. இந்த நிமிடங்களை மேலும் குறைக்கும் வகையில், வரைபடத்துடன் கூடிய இணைப்பு வசதியை, 108 ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்த உள்ளது.இதுகுறித்து, '108 ஆம்புலன்ஸ்' சேவையின் மாநில தலைவர் செல்வகுமார் கூறியதாவது:'இந்த சேவையை பயன்படுத்துவோர், வாகனத்தின் இருப்பிடத்தை அறிவதுடன், தங்கள் இருப்பிடத்தையும் துல்லியமாக தெரிவிக்கும் வகையில், 'மேப்' உடன் கூடிய இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.ஒருவர், 108 சேவையை தொடர்பு கொண்டதும், அவரது மொபைல் எண்ணுக்கு, ஒதுக்கப்பட்ட ஓட்டுனர் தொடர்பு எண், வரைபட இணைப்புடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். பயனாளி தங்கள் இருப்பிட மேப்பை, அதில் பகிரும் வசதி ஏற்படுத்தப்படுவதால், ஆம்புலன்ஸ் விரைவாக சம்பவ இடத்தை அடைய உதவியாக இருக்கும். இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி பெற்று, தமிழக அரசின் ஒப்புதலுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
11-Dec-2024