| ADDED : மார் 12, 2024 02:20 AM
மதுரை: 'திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுார் காமராஜ் 2018ல் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கரம் விழா நடக்கும். அது, 2018 அக்டோபரில் நடந்தது. ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். ஆற்றை துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை கோரி தமிழக சுற்றுலா, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள், திருநெல்வேலி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: தாமிரபரணி ஆற்றை பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். எங்கெங்கு கழிவுநீர் கலக்கிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மண்டபங்களை புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறநிலையத்துறை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். படித்துறைகளை புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அவை அமைந்துள்ள பகுதிகளின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் சார்பில், வரும் 26ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டது.