மேலும் செய்திகள்
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
27 minutes ago
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
35 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
38 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
46 minutes ago
கோவை : பாஸ்போர்ட் வழங்குவதைத் துரிதப்படுத்தும் நடவடிக்கையாக, கோவையில் 'பாஸ்போர்ட் சேவா கேந்திரா' ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவக்கப்படவுள்ளது; அதன் பின், பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு பொது மக்கள் நேரடியாக வர வேண்டிய தேவை இருக்காது.
பல்வேறு காரணங்களால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதிலும், விநியோகிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ், இந்தப் பணியை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, நாடு முழுவதும் 77 பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களைத் துவக்க, முடிவு செய்யப்பட்டு, இதுவரை 11 சேவா கேந்திரங்கள் துவக்கப்பட்டுள்ளன. டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம், இந்த சேவையை வழங்குவதற்கான நிறுவனமாக (சர்வீஸ் புரவைடர்) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் 2 , மங்களூர், ஹூப்ளி, சண்டிகார், லூதியானா, அம்பாலா, திருச்சி, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தலா ஒன்று என்ற எண்ணிக்கையில் சேவா கேந்திரங்கள் துவக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஏற்கனவே 4 சேவா கேந்திரங்கள் செயல்பட்டு வரும் நிலையில், நாட்டின் 12வது சேவா கேந்திரம் கோவையில் துவக்கப்படவுள்ளது.
கோவை அவிநாசி ரோட்டில், லோட்டஸ் கண் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கட்டடத்தில் 'ஏ.ஜி.டி. எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், எண் 25, பங்ஷனல் எலக்ட்ரானிக் எஸ்டேட், ' என்ற விலாசத்தில் இந்த 'பாஸ்போர்ட் சேவா கேந்திரம்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து இது செயல்படத் துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கே இல்லை; இனி அங்கே!: இந்த சேவா கேந்திரம் துவக்கப்பட்ட பின், கோவை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு யாரும் நேரில் வர வேண்டியதில்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே, அவர்களுக்கு விருப்பமான நாட்களைத் தேர்வு செய்து, அந்த நாளில் சேவா கேந்திரத்திற்குச் செல்வதற்கான அனுமதியைப் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் எளிதாகப் பயன் படுத்தும் வகையில் புதிய படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனிமேல், http://www.passportindia.gov.inஎன்ற 'வெப்சைட்' மூலமாக மட்டுமே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த முறையில் விண்ணப்பிக்கும்போது, அடுத்த 3 நாட்களுக்குள் 'அப்பாயின்மென்ட்' பெற்று விடலாம். மேற்கண்ட 'வெப்சைட்'டில் உரிய முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பின், அதனை பதிவிறக்கம் செய்து, அதனை எடுத்துக் கொண்டு பாஸ்போர்ட் சேவா கேந்திரத்துக்கு விண்ணப்பதாரரே அசல் சான்றுகளுடன் நேரில் செல்ல வேண்டும்.
அங்குள்ள கவுன்டரில் விண்ணப்பம் 'ஸ்கேன்' செய்யப்படும். விண்ணப்பதாரரை 'டிஜிட்டல்' முறையில் போட்டோ எடுப்பதுடன், அவரது 10 விரல்களும் 'பயோ-மெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்படும். இதன் மூலமாக, இந்த பாஸ்போர்ட்டை வேறு நபர் பயன்படுத்துவதும், போலி பாஸ்போர்ட் தயாரிப்பதும் முற்றிலும் தடுக்கப்படுகிறது.
போட்டோ மற்றும் கைரேகை பதிவுகள் எடுக்கப்படுவதால், விண்ணப்பதாரர் கட்டாயம் நேரில் வரவேண்டும். போட்டோ மற்றும் கைரேகை எடுத்தபின், தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, கட்டணம் பெறப்பட்டு, ரசீது வழங்கப்படும். அதன்பின், சேவா கேந்திரத்திலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் முன்னிலையில் நேரில் ஆஜராக வேண்டும்.
சான்றுகள் சரி பார்க்கும் அலுவலர், பாஸ்போர்ட் வழங்கும் அலுவலர் ஆகியோர் சான்றுகளை சரி பார்த்த பின்பே, பாஸ்போர்ட் வழங்குவதற்கான ஒப்புதல் வழங்குவர். முறைப்படி விண்ணப்பித்த பின், பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தின் 'கால் சென்டர்' மூலமாக, பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலையை நேரில் அறிந்து கொள்ளலாம்.
கோவை பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் கூறுகையில், ''சேவா கேந்திரம் செயல்படத் துவங்கிய பின், கோவை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும், பொது மக்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. மரணம், சிகிச்சை போன்ற காரணங்களுக்காக மிக மிக அவசரமாக வெளிநாடு செல்வோர் மட்டுமே, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.
விசாரணைக்கு அழைக்க! : பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தில் விண்ணப்பித்த பின், தங்கள் விண்ணப்பத்தின் நிலை பற்றி அறிய, சேவா கேந்திரத்தின் 'கால் சென்டரை' 1800-2581800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் தகவலை அறியலாம். இந்த 'கால் சென்டர்' ஆண்டு முழுவதும் செயல்படும்.
நேரடியாகப் பேசி தகவல்களைப் பெறுவதற்காக தொடர்பாளரும் நியமிக்கப்பட்டிருப்பார். தேசிய விடுமுறை நாட்களைத் தவிர, மற்ற வேலை நாட்களில் காலை 8.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை இவரைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.passportindia.gov.in வெப்சைட்டிலும் தகவல் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முன்பாக, பழைய முறையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பம் தொடர்பான தகவல்களை இந்த 'கால் சென்டர்' மற்றும் 'வெப்சைட்'டில் பெற முடியாது. அவர்கள் அனைவரும் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தையே அணுக வேண்டும். அல்லது http://www.passport.gov.inஎன்ற 'வெப்சைட்'டில் தகவல் அறியலாம்.
'டிபிசி'யும் மூடப்படும்! : கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களில் மாவட்ட பாஸ்போர்ட் பிரிவுகளில் இனி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தாலும், புதிய முறையில்தான் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அலுவலகங்களும் ஒரு மாத காலத்துக்கு மட்டுமே செயல்படும்.
பாஸ்போர்ட் சேவா கேந்திரம் முழுமையாக செயல்படத் துவங்கியதும், மாவட்ட பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்கள் முற்றிலுமாக மூடப்படும். அதேபோல, 'ஸ்பீடு போஸ்ட் கலெக்ஷன் சென்டர்'களிலும் இனி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. இதனால், பிற மாவட்ட மக்களுக்கு அலைச்சல் அதிகம் என்ற வருத்தம் எழ வாய்ப்புண்டு.
ஆனால், தேசத்தின் பாதுகாப்பு காரணங்களுக்காக நேரில் போட்டோ எடுப்பது, விரல்களைப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதால் இது தவிர்க்க முடியாது என்று பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்காலத்தில் சேவா கேந்திரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இந்த வருத்தம் குறையும்.
விண்ணப்பிக்கும் முறை : முதலில் http://www.passportindia.gov.inஎன்ற என்ற 'வெப்சைட்'டில் நுழைந்து, புதிய 'யூசர் ஐ.டி.' மற்றும் 'பாஸ்வேர்டு' உருவாக்க வேண்டும். தகவல்களைப்பூர்த்தி செய்து, மீண்டும் அதில் பதிவு செய்தபின், 'ஏஆர்என்' எனப்படும் 'அப்ளிகேஷன் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர்' மற்றும் 'அப்பாயின்ட்மென்ட் ஸ்லிப்'பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அசல் கல்விச் சான்றுகளுடன் பாஸ்போர்ட் சேவா கேந்திரத்துக்கு உரிய தேதியில், விண்ணப்பதாரரே நேரில் ஆஜராக வேண்டும்.
27 minutes ago
35 minutes ago
38 minutes ago
46 minutes ago