சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக தனியார் சார்பில், தேனியில், 10 மெகாவாட் திறனில், சிறிய நீர் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில், நீர் மின் நிலையங்களை, மின் வாரியம் மட்டுமே அமைத்துள்ளது. இதில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, 2024 இறுதியில், சிறிய நீர் மின் கொள்கையை அரசு வெளியிட்டது. அதன்படி, குறைந்தது, 100 கிலோ வாட் முதல் அதிகபட்சம், 10 மெகா வாட் வரை, மின் நிலையம் அமைக்கலாம். அந்த மின்சாரத்தை, பசுமை எரிசக்தி கழகம் வாங்கும். தனியார் இடத்தில் சிறிய நீர் மின் நிலையம் அமைக்க, கடந்த மார்ச் 3ம் தேதி, பசுமை எரிசக்தி கழகம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து, தேனி மாவட்டம் கம்பத்தில், 10 மெகாவாட் திறனில், ஐந்து அலகுகளில், சிறிய நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க, பி.பி.என்., நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. இதற்கான ஒப்புதல் ஆணையை, கோவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடக்கும் மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டில், பசுமை எரிசக்தி கழகம் வழங்க உள்ளது. தனியார் வாயிலாக அமைக்கப்பட உள்ள முதல் நீர் மின் நிலையம் இது.