| ADDED : நவ 23, 2025 01:06 AM
ஈரோடு: ''தி.மு.க., கூட்டணியில் உள்ள பிற கட்சியினர், அதிக 'சீட்' கேட்பது வழக்கம் தான்,” என அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோட்டில், நேற்று அவர் அளித்த பேட்டி: மேகதாது விவகாரத்தில், எந்த சூழலிலும், தமிழக அரசு மெத்தனம் காட்டவில்லை. இதில், அமைச்சர் துரைமுருகன் கடுமையாக உணர்வுகளை வெளிப்படுத்தினார்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்வரும் மாதந்தோறும் ஆய்வு நடத்தி, ஆலோசனை வழங்குகிறார். ராகுல் மற்றும் த.வெ.க., தலைவரான விஜய் ஆகியோர் பேசுவது குறித்து, காங்., - எம்.பி., ஜோதிமணி கருத்துகளை கூறி இருக்கிறார். காங்., - த.வெ.க., கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டு இருப்பதால், எதுவும் நடக்காது; எந்த மாற்றமும் ஏற்படாது. இதை சொல்வதால், யாரும் அச்சப்பட போவதும் இல்லை. தி.மு.க., கூட்டணியில், பிற கட்சிகளின் நிர்வாகிகள், கூடுதல் சீட்டுகளை கேட்பது வழக்கம்தான். தேர்தல் நேரத்தில், பொதுவான முடிவு என வரும்போது அவரவருக்கு தேவையான 'சீட்' நல்லவிதமாக ஒதுக்கப்படும். இவ்வாறு கூறினார்.