சென்னை: நீர்வழித்தடங்களில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை, ஆட்கள் மூலம் அகற்ற, நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை பருவ நெல் சாகுபடி பாசனத்திற்கு, ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த நீர் தங்கு தடையின்றி கடைமடை பகுதிகள் வரை செல்வதற்கு, நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகளை மேற்கொள்ள, 99 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக நீர்வளத்துறை கூறி வருகிறது. ஆனால், பல நீர்வழித்தடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், நீரோட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், ஆரணியாறு, கொசஸ்தலையாறு, புழல் ஏரி உபரிநீர் கால்வாய் ஆகியவற்றில் துார்வாரப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை கூறி வருகிறது. ஆனால், பல இடங்களில் ஆகாயத்தாமரை மட்டுமின்றி முள்செடிகள் மண்டி கிடக்கின்றன. வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'டிட்வா' புயல் காரணமாக, டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், நாளை முதல் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் திருச்சி மண்டல நீர்வளத்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் துரைமுருகன், செயலர் ஜெயகாந்தன் ஆகியோர், தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் தேங்கியுள்ள ஆகாய தாமரைகள், குப்பை கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும். டெல்டா மாவட்டங்களில், 'பொக்லைன்' இயந்திரங்களை பயன்படுத்தி வடிகால், ஆறுகளில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்த முடியாத பகுதிகளில், வேலையாட்கள் மூலம் அகற்ற வேண்டும் என, நீர்வளத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.