உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பால் உற்பத்தியாளர்களுக்கு சிறு பால் பண்ணை திட்டம்; 5,000 பேருக்கு தலா 4 கறவை பசு

 பால் உற்பத்தியாளர்களுக்கு சிறு பால் பண்ணை திட்டம்; 5,000 பேருக்கு தலா 4 கறவை பசு

சென்னை: ''தமிழகம் முழுதும் 5,000 பால் உற்பத்தியாளர்களுக்கு, 135 கோடி ரூபாயில் சிறிய பால் பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,'' என, ஆவின் மேலாண்மை இயக்குநர் ஜான் லுாயிஸ் தெரிவித்தார். பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களில், 5,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பெண்களுக்கு, ஆண்டு முழுதும் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில், 4 சதவீத வட்டி மானியத்துடன் கூடிய சிறு பால் பண்ணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அடுத்த மாதம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து, ஆவின் மேலாண்மை இயக்குநர் ஜான் லுாயிஸ் கூறியதாவது: இத்திட்டத்தை கடந்த வேளாண் பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. இதை, ஆவின் நிர்வாகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வான பயனாளிகளுக்கு, தலா நான்கு கறவை பசு அல்லது எருமை மாடுகள் வழங்கப்படும். அவற்றுக்கு, மூன்று ஆண்டு காப்பீடும் செய்யப்படும். பயனாளிகள், 30,000 ரூபாய் முன்பணமாக செலுத்த வேண்டும். மீதி, 2.7 லட்சம் ரூபாய் வங்கி வாயிலாக பெற்று தரப்படும். வங்கிக்கு செலுத்த வேண்டிய 4 சதவீத வட்டி தொகை, அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. இதில், 30 சதவீதம் பெண்களுக்கும், 18 சதவீதம் எஸ்.சி., - எஸ்.டி., பயனாளிகளுக்கும், 1 சதவீதம் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு தரப்படும். பயனாளிகள் குறைந்தது ஒரு கறவை பசு வைத்திருக்க வேண்டும்; பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருக்க வேண்டும். அரை ஏக்கர் சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் வைத்திருப்போர் மற்றும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பால் வழங்குவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 21 வயது முதல் 60 வயது உள்ள பயனாளிகள், அருகில் உள்ள பால் கூட்டுறவு சங்கம் மற்றும் அரசு கால்நடை டாக்டர்களை அணுகலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். பால் நிறுத்த போராட்டம் நாமக்கல்லில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கால்நடை தீவனத்திற்கான மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், 1 லிட்டர் பால் உற்பத்தி செய்ய, 65 ரூபாய் செலவாகிறது. ஆவின் கூட்டுறவு நிறுவனம், 1 லிட்டர் பாலுக்கு 30 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், 1 லிட்டர் பாலுக்கு, மாநில அரசு, 6 ரூபாய் மானியம் வழங்குகிறது. தமிழக அரசு, 3 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக, 1 லிட்டர் பாலுக்கு, 15 ரூபாய் வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். வரும் டிச., 28ம் தேதிக்குள் பால் விலையை உயர்த்தி வழங்காவிட்டால், டிச., 29 காலை முதல், தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை