உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  துணை வேந்தர்கள் நியமன விவகாரம் தமிழக அரசு மனு டிச., 2ல் விசாரணை

 துணை வேந்தர்கள் நியமன விவகாரம் தமிழக அரசு மனு டிச., 2ல் விசாரணை

'துணை வேந்தர்கள் நியமன மசோதா வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது, டிசம்பர் 2ல் விசாரணை நடத்தப்படும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைகளில் வேந்தராக மாநில முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்காமல் வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஒப்புதல் தந்தது மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தங்கள் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இதே வழக்கில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசின் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, அது சட்டமாக மாறி அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த குறிப்பிட்ட சட்டத்திற்கு எதிராக, பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவை, கடந்த மே 21ல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு, தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''இதே விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜனாதிபதி 14 கேள்விகள் எழுப்பியிருந்தார். ''அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. எனவே, அந்த தீர்ப்புக்கு பிறகு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்,'' என்று வாதிட்டார். விரைவாக விசாரியுங்க தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''தமிழகத்தில் உள்ள 21 பல் கலைகள், துணை வேந்தர் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. ''மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபருக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து, 'வழக்கு விசாரணை, டிசம்பர் 2ம் தேதி நடத்தப்படும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை