8 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகம் ஏற்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: 'கர்நாடகா திறந்து விடும் 8,000 கன அடி தண்ணீரை, தமிழகம் ஏற்கக்கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி., அதாவது வினாடிக்கு, 11,500 கன அடி தண்ணீரை திறக்கும்படி, கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு உத்தரவிட்டது. ஆனால், வினாடிக்கு 8,000 கன அடி மட்டுமே திறக்கப்படும் என, கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக அரசின் இந்த நியாயமற்ற முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது.கபினி அணைக்கு வரும் தண்ணீரை, இனி தேக்கி வைக்க முடியாது என்பதால் தான், வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். இப்போதும் தமிழகத்தை தன் வடிகாலாகவே கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, மனமுவந்து தண்ணீர் வழங்கவில்லை. இதைக் கண்டிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல், தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய உரிமைகளை, தி.மு.க., அரசு எந்த அளவுக்கு தாரை வார்க்கிறது என்பதற்கு, இதுவே எடுத்துக்காட்டு. கர்நாடகத்தின் அநீதியை, தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்க கூடாது. தமிழகத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.