சென்னை : வீடு விற்பனைக்கான பத்திரப்பதிவின் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டடங்களுக்கான, புதிய வழிகாட்டி மதிப்புகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்கள், சார் - பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்படுகின்றன. இதில், நிலத்துக்கான மதிப்பு, பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் இருக்க வேண்டும். ஆனால், கட்டடங்களுக்கான மதிப்பை தனியாக கணக்கிடுவது அவசியம். அதாவது, பொதுப்பணி துறை ஆண்டு தோறும் வெளியிடும் மதிப்புகள் அடிப்படையில், கட்டடங்கள் மதிப்பிடப்படும். அந்த வகையில், 2024 - 25ம் ஆண்டுக்கான கட்டடங்களுக்கான மதிப்பு விபரங்களை, பொதுப்பணி துறை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், கட்டடங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்புகளை வகைப்படுத்தி, பட்டியல் வடிவில், சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை அனுப்பி உள்ளது. ஆக., 16 முதல் இந்த மதிப்புகள் அடிப்படையில் பத்திரங்கள் இருக்க வேண்டும் என்றும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, l பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில், தரைதளத்தில், 10.7 சதுர அடிக்கு, 11,515 ரூபாய்; முதல் தளம், 10,535 ரூபாய்; இரண்டாம் தளம், 10,695 ரூபாய்; 3வது தளம், 10,870 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுl மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், 10.7 சதுர அடிக்கு தரைதளத்தில், 12,667 ரூபாய்; முதல் தளம், 11,589 ரூபாய்; இரண்டாம் தளம், 11,765 ரூபாய்; 3வது தளம், 11,957 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது l அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு கூடுதல் தளத்துக்கும், 10.7 சதுர அடிக்கு, 163.30 ரூபாய் என்ற அடிப்படையில் மதிப்பு உயரும். இதேபோன்று கட்டுமான பொருட்கள் அடிப்படையில், கட்டடங்களுக்கான பல்வேறு நிலை மதிப்புகளையும் பதிவுத்துறை பட்டியலிட்டுள்ளது. கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட கட்டட மதிப்புகளுடன் ஒப்பிட்டால், இந்த மதிப்பு, 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக உள்ளது. இதன் அடிப்படையில் தான், புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்புகள் நிர்ணயிக்கப்படும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.