கோவை:''தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட அக்கட்சியினரே தயாராக இல்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.எம்.ஜி.ஆர்., பற்றி,தி.மு.க., - எம்.பி., ராஜா தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவையில் நேற்றுநடந்தது.அதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆர்., பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது. இதற்கு முன், பொதுச் செயலர் பழனிசாமியின் தாயை ராஜா விமர்சித்தார்; இன்று எம்.ஜி.ஆரை விமர்சித்துள்ளார்.தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆரை, 'பெரியப்பா' என்கிறார் ஸ்டாலின்.எம்.ஜி.ஆரை மோசமாக விமர்சித்த ராஜாவுக்கு நீலகிரி தொகுதி மக்கள் பாடம் புகட்டுவர்.அ.தி.மு.க., செயல்படுத்திய திட்டங்களை, தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது; மூன்றாண்டுகளில் எந்த திட்டமும் தரவில்லை.அ.தி.மு.க., கட்சி,சின்னத்தை முடக்கப் பார்த்தனர். தி.மு.க.,வினரே, அக்கட்சிக்குஓட்டளிக்க மாட்டர்.யாரும் அ.தி.மு.க., கூட்டணிக்கு வரவில்லை என, கிளப்பி விடுகின்றனர். இதனால், கட்சியினர் சோர்வாகி விடக்கூடாது. அ.தி.மு.க.,வுக்கு போட்டி என்றால், அது தி.மு.க., மட்டுமே. மற்ற கட்சிகள் நம்முடன்போட்டி போடவே முடியாது.அ.தி.மு.க.,வை பார்த்து தி.மு.க., பயப்படுகிறது. லோக்சபா தேர்தலில் தி.மு.க., தோற்கடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, வேலுமணி பேசினார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''கோவை மாவட்டத்தை தி.மு.க.,வினர் மூன்று ஆண்டுகளாக புறக்கணித்து வருகின்றனர். லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளையும் வெல்வோம்.''அரசு திட்டங்களை, தி.மு.க., மாவட்ட செயலர்கள் துவக்கி வைக்கின்றனர். அதிகாரிகள் தி.மு.க.,வினர் போல் மாறி விட்டனர். மக்கள் பிரச்னைகள் குறித்து, கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்,'' என்றார்.அப்போது, 'இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் கிடைக்கும் என பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே' என நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, வேலுமணி பதிலளிக்க மறுத்தார்.
'தினமலர் தி.மு.க., பத்திரிகை'
கூட்டத்தில், வேலுமணி மேலும் பேசியதாவது:கோவை மாவட்ட 'தினமலர்' நாளிதழ், தி.மு.க., 'பி' டீம் போல் செயல்படுகிறது. உக்கடம் குளக்கரையில் ரோடு போட்டதை, தினமும் குற்றம் சுமத்தி எழுதினர். சென்னையை போல் பாலங்கள் கட்டினோம். அந்த பாலங்களை விமர்சித்து எழுதுகின்றனர்.'தினமலர்' தரமான பத்திரிகை. எம்.ஜி.ஆர்., புகழ்ந்த, அவரால் மதிக்கப்பட்ட நாளிதழ். நாம் கொண்டு வந்த திட்டங்களை எழுதுவதில்லை. 'இலவு காத்த கிளி' என, தலைப்பு வைக்கின்றனர். பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்தது; அதை பாராட்டி எழுதலாமே. ஆனால், அமைச்சர் முத்துசாமி பார்வையிடுவதையும், உதயநிதி துவக்கி வைப்பதையும் எழுதுகிறார்கள். 'தினமலர்' முழுக்க, முழுக்க தி.மு.க.,வாகி விட்டது.இவ்வாறு, வேலுமணி பேசினார்.