உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்த அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'தமிழக முதல்வர் ஸ்டாலின், எங்கு பார்த்தாலும் தன் தந்தை கருணாநிதி பெயரை வைக்கிறார். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முகப்பில் கருணாநிதி சிலையை வைத்துள்ளனர்' என்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.பழனிசாமியின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில், கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட, கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயரை சூட்டியதோடு நிறுத்தி கொண்டார். வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ளும் வண்ணம், அங்கு எம்.ஜி.ஆர்., சிலையை வைத்திருக்கலாம்; அதை ஏன் அ.தி.மு.க., அரசு செய்யவில்லை?அதுபோல, தான் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட ஓமந்துாரார் மருந்துவமனை முன், ஜெயலலிதா அவரது சிலையை வைத்திருக்கலாம்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அங்கு கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவை வைத்து திறந்து விட்டனர்.சென்னை, நந்தனம் ஓய்வூதிய அலுவலக வளாகத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்தத்திற்கு, 'ஜெயலலிதா வளாகம்' என்று பெயர் வைத்தனர். ஆனால் தி.மு.க., ஆட்சியில் அந்த அலுவலகத்திற்கு,'பேராசிரியர் அன்பழகன் மாளிகை' என்று பெயர் வைத்து, அவரது சிலையையும் நிறுவி விட்டனர்.எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவை பிரதமரையோ அல்லது ஜனாதிபதியையோ அழைத்து, மிக பிரமாண்டமாக நடத்தி இருக்கலாம்; ஆனால், அந்த விழாவை தெருமுனை கூட்டம் போல் நடத்தி விட்டனர்.ஆனால், தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி நுாற்றாண்டு விழாவை, முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தை அழைத்து பிரமாண்டமான முறையில் நடத்தி விட்டனர்.சென்னை கடற்கரை அருகில், மக்கள் கண்களில் படாத உயர்கல்வி மன்ற வளாகத்தில், ஜெயலலிதாவின் சிலையை அ.தி.மு.க., ஆட்சியில் வைத்துள்ளனர்.தி.மு.க.,வினரோ ஆட்சிக்கு வந்தவுடன், நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி வளாகத்தின் நுழைவாயிலுக்கு, 'அன்பழகன் வளாகம்' என பெயர் சூட்டி, கல்வெட்டு அமைத்து, அவரது சிலையையும் வைத்துள்ளனர்.ஜெயலலிதா தான் முதல்வராக பதவி வகித்த காலத்தில், தன்னை அரசியலில் உயர்த்தி விட்ட ஆசான், எம்.ஜி.ஆரின் பெயரை ஒரு அரசு அலுவலகத்திற்காவது சூட்டியது உண்டா அல்லது அவரின் சிலையை தான் வைத்தது உண்டா? இதற்கு ஜெயகுமார் பதில் சொல்வாரா?