சென்னை:வெளியூர்களில் இருந்து சென்னைக்கு தினமும் ஏராளமான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிப்போர், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு டிக்கெட் வைத்திருந்தாலும், அதற்கு முந்தைய நிலையங்களிலேயே இறங்கிச் செல்கின்றனர். அப்படி இறங்கி செல்வோர், விரைவு ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம் என, ரயில்வே விதி கூறுகிறது. ஆனால், விரைவு ரயில் டிக்கெட்டை ஏற்றுக் கொள்ளாமல் அபராதம் வசூலிக்கின்றனர். இது தொடர்பாக, நம் வாசகர் ஒருவர் எழுதிய கடிதம், நம் நாளிதழில் கடந்த மாதம் 30ம் தேதி, 'இது உங்கள் இடம்' பகுதியில் வெளியானது. 'விரைவு ரயில் டிக்கெட் வைத்திருந்த போதிலும், மின்சார ரயில் டிக்கெட் இல்லை என்று கூறி, சென்னை பழவந்தாங்கல் நிலையத்தில் அபராதம் விதித்தனர்' என்று கூறியிருந்தார்.இது தொடர்பாக, தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:ரயில்வேயின், 2015ம் ஆண்டு உத்தரவுப்படி, விரைவு ரயில் முன்பதிவு அல்லது 'ஏசி' வகுப்பு டிக்கெட் வைத்திருக்கும் பயணி, அந்த ரயில் சென்றடையும் நிலையம் வரை மின்சார ரயிலில் பயணிக்கலாம். ஆனால், டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அதே தடத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும்.நெல்லை விரைவு ரயிலில் சென்னை எழும்பூர் வரை பயணம் செய்ய, முன்பதிவு டிக்கெட் வைத்திருந்த பயணி, அதே டிக்கெட்டில் மின்சார ரயிலில் பயணித்து, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார். அங்கு பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர், அந்த பயணிக்கு அபராதம் விதித்துள்ளார். ரயில்வே விதிகள்படி, அந்த டிக்கெட் பரிசோதகரின் நடவடிக்கை சரியானது அல்ல. எனவே, ரயில்வே அலுவலர்கள், டிக்கெட் பரிசோதகர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் இதுபற்றி அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.