UPDATED : டிச 29, 2025 02:26 PM | ADDED : டிச 29, 2025 09:34 AM
நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில், பைலட் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.அட்லாண்டிக் கவுன்டியில் ஹாமண்டன் விமானநிலையத்திற்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வானில் வட்டமிட்டபடி, கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விபத்து குறித்து அறிந்த அதிகாரிகள், உடனடியாக மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டனர். 'என்ஸ்ட்ரோம் எப்-28ஏ மற்றும் என்ஸ்ட்ரோம் 280சி ஆகிய இரு ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியதாக பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தின் போது, பைலட்டுகளை தவிர வேற யாரும் பயணிக்கவில்லை. இதில், ஒரு பைலட் உயிரிழந்தார். மற்றொரு பைலட் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இருஹெலிகாப்டர்கள் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களின் வழித்தடம், தொலைத்தொடர்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.