ஏழரை கேள்விகள்!
மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டிய பதவியில் சிறப்பாக செயல்படுவதாக நம்பும் எதிர்க்கட்சி தலைவரே... பதில் கேட்கிறது தமிழகம்! 1. அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்கும் விதமாய், 'யார் அந்த சார்' என்று அ.தி.மு.க., மூட்டிய நெருப்பு, பற்றிய வேகத்தில் பம்மிப் படுத்ததன் பின்னணி என்ன?2. 'கருணாநிதியை அழைக்கும் விதம்' பற்றிய கடந்தவார சட்டசபை சர்ச்சையின் போது, 'கலைஞர் என்றல்ல... 'பாரதத்தை காக்கும் சிப்பாய்' என என்னை அழையுங்கள்' என்று, 1971ல் கருணாநிதி கூறியதை ஏன் நீங்கள் நினைவூட்டவில்லை?3. எதிர்க்கட்சி தலைவரான உங்களின் கேள்விகளுக்கு பெரும்பாலும் அமைச்சர்களும், நேற்று முளைத்த தலைவர் ஜோசப் விஜய்க்கு முதல்வரும் பதில் சொல்வதை நாங்கள் கூர்ந்து கவனிக்கிறோம்; நீங்கள்?4. வைகை அணை நீர் ஆவியாவதை தடுக்க முனைந்த 'தெர்மாகோல்' திட்டம் வறுபடுவது போல், தமிழகத்தின் சில சிக்னல்களில் சில வாகனங்களுக்கு மட்டும் 'நிழல்' போல் ஒன்றைக் காட்டும் 'பசுமை பந்தல்' திட்டம் வறுபடுமா? 5. 'உங்களில் ஒருவன்' என வீடியோ வெளியிட்டு முதல்வர் 'மாஸ்' காட்டுகையில், 'நான் பேசுவதை 'எடிட்' செய்து விடுகிறீர்கள்' என்று ஊடகங்கள் முன் முகம் கோணுவது முன்னாள் முதல்வருக்கு அழகா?6. உடன்பிறப்புகளின் சொத்துகுவிப்பு பற்றி தீரத்துடன் முழங்கியதற்காக தி.மு.க.,வில் இருந்து 1972ல் நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தோற்றுவித்த அ.தி.மு.க., 'டாஸ்மாக்' முறைகேடு தொடர்பாக இப்படியே மவுனம் காக்கப் போகிறதா?7. உங்கள் அடையாள சிரிப்புடன் சொல்லுங்கள்; அமைதிப்படை திரைப்படத்தின் நாகராஜசோழன் பாத்திர நகலான தமிழக அரசியல்வாதி யார்?7½ 'வறட்டு பிடிவாதம்' பற்றி...?