ஏழரை கேள்விகள்!
இன்றைய தமி ழக முதல்வரால், 'நவீன தமிழகத்தின் சிற்பி' என அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆஸ்தான சீடரும், தமிழகத்தின் பழுத்த அரசியல்வாதியும், மூத்த அமைச்சருமான துரைமுருகனிடம் இக்கேள்விகளை வீசுகிறது தமிழ கம்! 1 சமீபத்திய மேடையில், 'ராஜேந்திர சோழன்' என உங்களால் ஒப்பனை செய்யப்பட்ட துணை முதல்வர் தங்களின் பேச்சை ரசித்திருக்க, பேச்சை முடிக்குமாறு முதல்வர் வலியுறுத்தியது எங்களுக்கு வலித்தது; தங்களுக்கு எப்படி? 2 'தி.மு.க., பிரமுகர் பிரதமராக வாய்ப்பே இல்லை; எங்கள் உயரம் எங்களுக்குத் தெரியும்' என்று பேசிய உங்களை, 'ராஜராஜனைக் காட்டிலும் இந்த ராஜேந்திரன் ஆட்சிப்பரப்பை நீட்டிப்பான்' என முரணாக பேச வைத்தது எது? 3 'தி.மு.க.,வை உதயநிதி காப்பார்' என்கிறீர்களே... 'ஆசிய கண்டத்தை ஆட்டி வைக்கும் வல்லமையை இவர் கண்களில் பார்க்கிறேன்' என அண்ணாதுரையை ஈ.வெ.ரா.,விடம் ஜின்னா புகழ்ந்தது போல் ஏதேனும் ஒரு நிகழ்வு? 4 'உங்கள் இழப்பிற்கு காரணமே இவர் தான்' என அரசியல் களம் கைகாட்டும் த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய் மீது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொண்டிருக்கும் பேரன்பு, உங்களது நீண்ட அரசியல் பயணத்தில் புதிய அனுபவமா? 5 'குனிந்து உயரும் வல்லமை, எவரையும் ஏணியாக்கும் சாமர்த்தியம்; இவை, அரசியல்வாதியின் தனித்துவங்கள்' எனில், 'தனி வழி' பழனிசாமி - 'தந்தை வழி' மு.க.ஸ்டாலின்; இவ்விருவரில் யார் மிகச்சிறந்த அரசியல்வாதி? 6 'இருண்டு கிடக்கும் இடத்தில் ஒளி ஏற்றுவது தி.மு.க., கொடி' என்கிறீர்கள்; சரி... இந்த தீபாவளி தருணத்தில், 790 கோடி ரூபாய் வருமானத்தை 'டாஸ்மாக்'கிற்கு அள்ளித் தந்த தமிழக வீடுகளில் தி.மு.க., அரசு நிரப்பியது இருளா... ஒளியா? 7 'முன்னாள் முதல்வர் கருணாநிதி எதையும் என்னிடம் பகிர்வார்; இவர் அப்படி இல்லை' என்று முதல்வர் அருகில் இருந்து நீங்கள் சொன்னது, முதல்வருக்கு பகிரப்பட்ட உங்கள் வேதனையா... கட்சியினருக்கு தந்த விழிப்புணர்வா? 7 ½ 'கந்தர்வக்கோட்டை' - தங்கள் பார்வையில்...?