உள்ளூர் செய்திகள்

சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!

கனத்த இதயத்துடன் 'இயக்குனர் சிகரம்' கே.பாலசந்தரை நெருப்புக்கு தின்னக் கொடுத்து விட்டு வந்த டிசம்பர் 24, 2014. அதன்பின்பான பல இரவுகளில் தன் துாக்கத்தை களவாடி வரும் அவரது நினைவுகளை, விழியோர ஈரத்துடன் பகிர்ந்து கொள்கிறார் நாடக கலைஞர் 'டிவி' வரதராஜன். 'நாடகக்காரங்களை ஏன்யா நடிக்கக் கூட்டிட்டு வர்றீங்க... சாயங்காலம் ஆனா டிராமா இருக்கு, போகணும்னு கழுத்தை அறுப்பாங்களே!' இப்படி சலித்துக் கொள்ளும் இயக்குனர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், உலகின் மிகப் பெரிய இயக்குனரான எங்கள் அன்புக்குரிய ஆசான் கே.பாலசந்தர் நாடகங்களை மதிப்பவர்; நாடக கலைஞர்களை பெரிதும்போற்றுபவர். அவரது இயக்கத்தில் 'காதல் பகடை' சீரியலின் இறுதிக்காட்சி; படப்பிடிப்பு வடபழனியில்; அன்றுடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. எனக்கானது ஒரு சிறிய காட்சி. அன்று எனக்கு மயிலை ஆர்.ஆர்.சபாவில் நாடகம். நாடகம் முடித்து நான் படப்பிடிப்பு தளத்திற்கு வருகையில் இரவு மணி 9:40. அங்கே, கே.பி.சார் காத்திருக்கிறார்.'எல்லா காட்சிகளையும் இரவு 7:30 மணிக்கே முடித்தாயிற்று; உங்களுக்காகத் தான் வெயிட்டிங்' என்றார்கள். நான் கே.பி.சாரிடம் சென்று, 'ஸாரி சார்...' என்றேன். அதை அவர் காதில் போட்டுக் கொள்ளாமல், 'டிராமா எப்படி போச்சு; நல்ல கைதட்டலா' என்று விசாரித்தார். அன்று, படப்பிடிப்பு முடித்து அவர் புறப்படும் போது இரவு மணி 11:00. 'பிரேமி' சீரியல். அவரிடம் இருந்து அழைப்பு. 'உனக்கு இப்போ என்ன கமிட்மென்ட்?' என்றார். 'இன்னும் இரண்டு நாட்களில், 'எல்கேஜி ஆசை' எனும் புதிய நாடகத்தை அரங்கேற்றவிருக்கிறேன்; இரண்டு நாள் கிராண்ட் ரிகர்சல்' என்றேன். 'சரி, நாளை ஒருநாள் எனக்காக வேலை செய். உன் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து விடுகிறேன். உன் டிராமா அரங்கேற்றத்திற்கு பின் மற்ற காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார். மறுநாள் படப்பிடிப்பு முடிந்து புறப்படும் போது, 'மீதிக்காட்சியை நாளைக்கு எடுத்துக் கொள்ளலாம்' என்றபடி அவர் காரில் ஏற, ஓடிச்சென்று காரை மறித்தேன். 'என்ன வரது?' என்றார். 'சார், மன்னிச்சுக்குங்க... நாளைக்கு நாடக ரிகர்சல் இருக்கு!' என்றேன். 'ஐயையோ... நான் மறந்தே போயிட்டேன்!' என்றவர், சிறிது யோசனைக்குப் பின், 'ஒண்ணு பண்ணு... நாளைக்கு காலையில 5:00 மணிக்கு வந்துடு. 10:00 மணிக்கு உன்னை அனுப்பிடுறேன்' என்றார்!சரியாக காலை 5:00 மணிக்கு செட்டுக்குள் நுழைந்த எனக்கு அதிர்ச்சி. இயக்குனர் சிகரம் எனக்கு முன்பாக வந்து, ஸ்கிரிப்டில் காட்சிகளை பிரித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன், 'குட்மார்னிங்... சீக்கிரம் போய் மேக்அப் போட்டுக்கோ' என்றார். அடுத்த 15 நிமிடத்தில் நான் ரெடி. என் சம்பந்தப்பட்ட காட்சிகளை அவர் முடிக்கும்போது காலை 8:45 மணி. 'நன்றி' சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானேன். 'வரது... அதான் சொன்னதுக்கு ஒரு மணி நேரம் முன்னாலேயே விட்டுட்டேன்ல; டிபன் சாப்பிட்டுப் போயேன். ஆல் தி பெஸ்ட் பார் தி இனாகுரேஷன்!' - அவர் வாழ்த்த, நான் சிலிர்த்துக் கொண்டேன். மாதா பிதா குரு தெய்வத்தை உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒருவர் ஒருவராக இழப்பார்கள். ஆனால், நானும் நாடக உலகமும் நால்வரையும் ஒரே நாளில் இழந்து விட்டோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !