உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: பரோஸ் (மலையாளம்) 3D

புதையலை பாதுகாக்கும் கதை!அரசன் 'டா காமா'வின் புதையலை அவரது வழித்தோன்றலிடம் ஒப்படைக்க நான்கு நுாற்றாண்டுகளாக காத்திருக்கிறது பரோஸ் பூதம். கதைப்படி, பரோஸின் காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டது; ஆனால், 'லாலேட்டன் இயக்கியிருக்கும் முதல் படம்' எனும் எதிர்பார்ப்பில் வந்த நமக்கு?கண்களை உரச வரும் விரல்களையோ, ஈட்டியையோ, கூட்டமாக பறந்து செல்லும் மின்மினிகளையோ தொட்டுப்பார்க்க முயற்சி செய்யும் அளவுக்கு முப்பரிமாண காட்சிகளில் நிறைவான துல்லியம்! உண்மையும் கிராபிக்ஸும் இணையும் இடங்கள் சிலவற்றில் செயற்கைத்தனம்; அத்தருணங்கள் தரும் சோர்வுகளில் இருந்து நம்மை மீட்டெடுப்பது முப்பரிமாண தொழில்நுட்பம் மட்டுமே! 'ஹாலிவுட்' மார்க் கிலியனால் பின்னணி இசை மிகச்சிறப்பு. லிடியன் நாதஸ்வரத்தின் இசை பங்களிப்பிலும் பரம திருப்தி. மோகன்லால் குரலில் வழியும் பாடலின் போது மட்டும்தான்... நெருப்பில் விழுந்த புழுவாகிறது மனம்! 'ப்ரோஸன் - ஓலாப், கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி - க்ரூட்' கதைகளில் முதன்மை பாத்திரங்களோடு திரைக்கதை முழுக்க பயணிக்கும் இச்சிறு பாத்திரங்களுக்கு உலகெங்கும் ரசிகப் பட்டாளம் உண்டு. இதிலோ, 'நீயெல்லாம் வரலைன்னு யார் அழுதா?' எனக் கேட்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது சூனியக்கார பொம்மை வூடு! தீயசக்திகள் என்று கறுப்பு தோல்காரர்களை சித்தரிக்கும் அவலம் இப்படைப்பிலும் நிகழ்ந்திருக்கிறது. சிறுவர்களுக்கான படைப்பென்றாலும் பெற்றோரையும் அவை கவர்ந்தால்தானே அரங்கம் நிரம்பும்; இதில் பெரியவர்களை ஈர்க்கும் விதத்திலான உருப்படிகள் எள்ளளவும் இல்லை!இன்னொருமுறை இப்படியான பொறியில் லாலேட்டன் நம்மை சிக்க வைக்க மாட்டார் என்று நம்புவோமாக!ஆக...: 'புத்தாண்டில் விடியல் வரும்' என்று நான்காண்டுகளாக நம்புவோருக்கான படம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !