நாங்க என்ன சொல்றோம்னா...: திரு.மாணிக்கம்
அறம் பாடும் திரு.மாணிக்கம்!குமுளியில் லாட்டரி தொழில் செய்யும் மாணிக்கத்திடம் லாட்டரி சீட்டு வாங்கும் பெரியவர், தன் கைப்பணம் தொலைந்த நிலையில் அந்த லாட்டரி சீட்டை மாணிக்கத்திடமே ஒப்படைத்து செல்கிறார். ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழும் அந்த லாட்டரி சீட்டுக்கு மாணிக்கத்தின் குடும்பமும் காவல்துறையும் வலைவீச, மாணிக்கம் என்ன செய்தார்?நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்தவர்களை திரையில் நிழலாக ஒரு நடிகர் பிரதிபலிக்கையில், நிஜத்தின் புகழில் நிழலுக்கு பங்கு கிடைக்கும். ஆனால், சமுத்திரக்கனியை போல 'நல்ல அப்பா, நல்ல ஆசிரியர், நல்ல நண்பர்...' வகையிலான கற்பனை பாத்திரங்களில் ஒருவர் நடிக்கையில், 'பூமர்' எனும் கிண்டல் எழுகிறது. திரு.மாணிக்கத்தை பொறுத்தவரையில் சமுத்திரக்கனி நல்ல ஹீரோ! நந்தா பெரியசாமியின் எழுத்து தனித்துவம் பெற்றிருக்கும் அளவுக்கு அவரின் இயக்கம் செழுமை பெறவில்லை. நவீனத்துவம் பெறாத காட்சி அமைப்புகளாலும், மிக எளிதாக கணித்து விடக்கூடிய திரைக்கதையாலும் பெரியவரைத் தேடிச் செல்லும் மாணிக்கத்தின் பயணத்தில் சுவாரஸ்யம் அவுட்! கதையில் தம்பி ராமையாவின் வருகைக்கு என்ன அவசியம் என்பதற்கு பதில் இல்லை. வரதட்சணை கொடுமையால் பிறந்த வீட்டுக்கு வந்த பெண்ணை மீண்டும் கணவனிடம் அனுப்பும் விதத்தில் நமக்கு உடன்பாடில்லை... இப்படியாக, திரைக்கதை சறுக்கும் இடங்கள் சில உண்டு!மாணிக்கம் இவ்வளவு நல்லவராக இருப்பதற்கான காரணத்தை விளக்க வரும் ப்ளாஷ்பேக்... கிலுகிலுப்பை ஆட்டிச் செல்கிறது! 'நல்லவர், நேர்மையாளர், பண்பாளர் என்பெதல்லாம் சாதாரண மனித இயல்புகளே; இவற்றை கொண்டாடும் அளவுக்கு சமூகம் இருக்கிறது எனில் மனிதர்களிடம் ஏதோ கோளாறு இருக்கிறது' என்று எழுத்தில் சொல்லியதை காட்சிகளிலும் சொல்லியிருந்தால் இந்த ஆண்டின் சிறந்த திரை அனுபவமாக இப்படம் இருந்திருக்கும்.ஆக...: 'பூமர்' என்பார், 'அட்வைஸ் பார்ட்டி, கிரிஞ்ச், மொக்கை கேஸ்' என்பார்... அறம் அறியாதார்!