நாங்க என்ன சொல்றோம்னா: பசூகா (மலையாளம்)
'இவனுக்கு எப்பவும் நம்ம கூட விளையாடுறதே வேலையா போச்சு!'கைப்புள்ளையாக புலம்புகிறார் கொச்சியின் காவல் உதவி ஆணையர் பெஞ்சமின்; காரணம், ஒரு கொள்ளையன். 'வீடியோ கேம்கள்' பாணியில் கொள்ளையடிக்கும் அவனுக்கு பொறி வைக்கிறார் பெஞ்சமினின் நண்பரும் முன்னாள் தடயவியல் நிபுணருமான ஜான் சீசர். அந்த பொறியில் அவன் சிக்கினானா... தப்பினானா?பேருந்து பயணத்தில் கொள்ளையன் உடனான தனது பரமபத ஆட்ட அனுபவங்களை, ஜான் சீசராக வரும் மம்மூட்டி வீடியோ கேம்களின் ரசிகன் ஹக்கீம் ஷாவுடன் பகிர்வதாக திரைக் கதை. விலை மதிப்பில்லா பொருட்களை திருடுவது, வீடியோ கேம் பெயர்கல் காவல் துறைக்கு துப்பு கொடுப்பது என கொள்ளையனின் அணுகுமுறை திரைக்கதையை உந்தி தள்ளுகிறது!தான் சொல்லவந்த கதையை மறந்துவிட்டு 'மம்மூட்டியின் அழகை பாருங்க; அவர் நடையை பாருங்க...' என இடையிடையே வர்ணனையாளராக மாறிவிடுகிறார் இயக்குனர். இறுதி 15 நிமிட திருப்பம் மட்டும் இல்லை என்றால் பெஞ்சமினின் புலம்பல்தான் நமக்கும்!பல்லி சப்தமிடுதலைக் கூட வழக்குடன் சம்பந்தப்படுத்தி நாயக பாத்திரங்கள் புத்திசாலிகளாக மிளிரும் வழக்கமான சினிமாத்தனங்கள் சலிப்போ சலிப்பு! கொள்ளையனுக்கு பொறி வைப்பதை நோக்கிதான் கதை நகர்கிறது என்பதே முக்கால் பாதியில் தான் தெளிவாகிறது. போக்கிடம் தெரியாத காட்சிகளால் ஜான் சீசரின் பேருந்து பயணம் நீ....ண்டிருக்கிறது! சமீபத்திய படைப்புகளுடன் ஒப்பிட்டால் தனது கற்பனைகளை சுமாராக ஜோடித்திருக்கிறார் இயக்குனர் டீனோ டென்னிஸ். நல்ல அங்கீகாரத்திற்கு அவர் இன்னும் உழைக்க வேண்டும்.ஆக...தமிழ் தல, மலையாள தல, கிரிக்கெட் தல... மூன்றும் நம்மை வைச்சு செய்கின்றன!