உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / வாரிசு குழப்பம் உள்ள பட்டாவை நம்பி வீடு, மனை வாங்கலாமா?

வாரிசு குழப்பம் உள்ள பட்டாவை நம்பி வீடு, மனை வாங்கலாமா?

பொதுவாக வீடு, மனை வாங்கும் போது, அது தொடர்பான பத்திரத்தில், முந்தைய பரிமாற்றங்களில் வில்லங்கம் இருக்கிறதா என்று பார்ப்போம். அந்த சொத்தின், கடந்த, 30 ஆண்டு கால பரிமாற்றங்களில் வில்லங்கம் உள்ளதா என்று தான் பரவலாக பார்க்கப்படுகிறது. ஆனால், பத்திர அடிப்படையில் மட்டும் வில்லங்கம் பார்ப்பது போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் நேரடி வாரிசுகளாக உள்ள சொத்துகளில் பத்திர அடிப்படையிலான வில்லங்க சரி பார்ப்பு மட்டும் போதாது. நீங்கள் வாங்க நினைக்கும் சொத்தில், கடந்த, 30 ஆண்டுகளில் பத்திர ரீதியாக நடந்த பரிமாற்றங்கள் என்ன என்பதை முதலில் அறிய வேண்டும். வில்லங்க சான்றிதழ் மற்றும், முந்தைய ஆவணங்களின் பிரதி அடிப்படையில் இந்த விபரங்களை பட்டியலிட வேண்டும். பதிவு தேதி, பத்திர எண், விற்றவர், வாங்கியவர் பெயர், பரப்பளவு, மதிப்பு ஆகிய விபரங்களை பட்டியலிடும் போது அதில் ஏதாவது வேறுபாடு உள்ளதா என்பது தெரியவரும். இதில் அனைத்து விபரங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகும் நிலையில், அந்த சொத்தில் வில்லங்கம் இல்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுகின்றனர். ஆனால், பத்திர அடிப்படையில் மட்டும் இந்த சரி பார்ப்பு பணிகள் நடந்தால் அது முழுமையான நடவடிக்கையாக அமையாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு பதிவு விபரங்களையும் குறிப்பிடும் போது, அதில் உள்ள பெயர்கள், சொத்தின் சர்வே எண், பரப்பளவு விபரங்கள் பட்டாவுடன் ஒத்துப் போக வேண்டும். இதில் தனி நபர்கள் வகையில் நடக்கும் பரிமாற்றங்களில் வில்லங்கம் எதுவும் இல்லை என்று தெரியவந்தாலும், ஏதாவது ஒரு நிலையில் வாரிசுகள் ரீதியாக புதிய வில்லங்கம் உருவாக வாய்ப்புள்ளது. ஒரு நபர் சரியான உரிமையாளர் என்பது பத்திரம்,பட்டா ரீதியாக தெரியவந்தாலும், அவர் இறந்த நிலையில், பட்டா மாற்றம் உரிய முறையில் நடந்து இருக்க வேண்டும். பத்திர ரீதியாக வாரிசுகள் பெயரில் பரிமாற்றம் நடந்ததாக ஒரு ஆவணத்தை உங்களிடம் விற்பவர் காட்டினாலும், அந்த விபரம் பட்டாவில் தெளிவாக உள்ளதா என்று பாருங்கள். பல இடங்களில் வாரிசுகளில் ஒருவர் தன் பெயரில் ஏதாவது ஒரு பத்திரத்தை தயாரித்து, அதை காட்டி சொத்து விற்பனையை முடிக்க முயற்சிப்பார். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உள்ள நிலையில், பட்டா தெளிவாக இருக்காது. இத்தகையசூழலில் பத்திரத்தை மட்டும் நம்பி நீங்கள் அந்த சொத்தை வாங்கினால், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து பட்டா தொடர்பான விஷயங்களை முழுமையாக ஆய்வு செய்யுங்கள். பட்டாவில் குறைபாடு இருக்கும் சொத்துக்களை அவசரப்பட்டு வாங்குவதில் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அலுவலர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ