'கண்டிப்பாக செங்கற்களை விட, ப்ளை ஆஷ் கற்கள் பலமானவையே, இது அதிக தாங்கும் திறன் கொண்டது,'' என்று, வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நம்பிக்கை தருகிறார், கோவை மாவட்ட அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ரமேஷ்குமார்.-- செந்தில், கோவில்பாளையம்.வீட்டின் பேஸ்மென்ட் உயரம் எவ்வளவு வைக்கலாம்?
வீடு கட்டும் இடத்தின் முன் உள்ள சாலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அந்த வீதியின் அருகில் உள்ள முக்கிய சாலையின் உயரத்திலிருந்து குறைந்தது, 3 அடியாவது உயரமாக இருக்குமாறு, பேஸ்மென்டை அமைக்க வேண்டும்.எங்களது வீட்டை கட்டவிருக்கும் பொறியாளர், வீட்டின் சுவரை கட்டுவதற்கு, செங்கலுக்கு பதிலாக ப்ளை ஆஷ் கற்களை பயன்படுத்தலாம் என்று கூறுகிறார். அப்படி கட்டினால், அது செங்கலை விட பலமாக இருக்குமா? -- ஸ்ரீ திவ்யா, ஜோதிபுரம்.கண்டிப்பாக, செங்கற்களை விட ப்ளை ஆஷ் கற்கள் பலமானவையே. இது அதிக தாங்கும் திறன் கொண்டது. இதில் நீரை உறிஞ்சும் தன்மை குறைவாக இருப்பதும், சிறப்பு அம்சம். இதை சரியான அளவுகளில், தரமான முறையில் தயாரிக்கப்பட்டவையா என கண்டறிந்து, வாங்கி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். செங்கலை விட ப்ளை ஆஷ் கற்களை பயன்படுத்துவது, சுற்றுப்புற சூழலுக்கு நல்லது. இந்த கற்களை முழு கட்டடத்துக்கும் பயன்படுத்தாவிட்டாலும், குறைந்தது பூமி மட்டத்திலிருந்து பேஸ்மென்ட் உயரம் வரை, கட்டும் கட்டடத்துக்கு உபயோகிப்பது மிகவும் சிறந்தது.நாங்கள் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில், குடிநீரை சேமிக்க எத்தனை லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டினால் சரியாக இருக்கும்? எங்களது வீட்டில் 5 நபர்கள் உள்ளோம். -ஐஸ்வர்யா, சாய்பாபா காலனி.தங்களது வீட்டில் போர்வெல் அமைந்துள்ளீர்களா, அப்படி இருப்பின் அந்த நீரையும் உபயோகிப்பீர்களா என்பதை குறிப்பிடவில்லை. இருப்பினும், 5 நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு அவர்களின் தேவைக்கேற்ப, 6,000 முதல் 8,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டினால் சரியாக இருக்கும். எங்களது வீட்டின் மொட்டை மாடியில், தளத்திற்கு மேலே வாட்டர் புரூபிங் செய்து கொண்டால், வரும் காலத்தில் நீர் கசிவு வீட்டிற்குள் இருக்காது என்று, பில்டர் கூறுகிறார். இது கண்டிப்பாக செய்ய வேண்டுமா? - நடராஜன், வடவள்ளி.எப்போதும் நமது வீட்டின் மேற்கூரையில், நீர்க்கசிவு வராமல் இருக்க மேற்கூரையின் மேற்புறம் வாட்டர் ப்ரூபிங் செய்து கொள்வது மிகவும் அவசியம். ரூப் கான்கிரீட்டின் மீது சிமென்ட் தளம் போட்ட பின், வாட்டர் ப்ரூபிங் செய்தால், அதன் மீது நாம் அடிக்கடி நடப்பதினால் ஏற்படும் உராய்வின் காரணமாக, விரைவில் வலுவிழந்து விடும். எனவே, ரூப் கான்கிரீட்டின் மீது தளம் போடுவதற்கு முன்பு, சரியான முறையில் வாட்டர் புரூப்பிங் செய்து கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.தற்போது ஒருவருக்கு நான் கட்டிக் கொடுக்கும் வீட்டில், பில்லர் மற்றும் சுவற்றுக்கு இடையே சிமென்ட் பூச்சின் மீது வெடிப்பு வருகிறது. இதை எப்படி சரி செய்யலாம்? தங்களது ஆலோசனை தேவை. -ராஜேந்திரன், சிறுமுகைசெங்கல் சுவர் மற்றும் கான்கிரீட் பில்லர்களுக்கு இடையே, நாம் எந்த இணைப்பையும் ஏற்படுத்துவதில்லை. காலநிலை மாற்றத்தில், செங்கல் கட்டடம் சற்று சுருங்கும் போது, இது போன்ற வெடிப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, பில்லர் மற்றும் செங்கல் சுவற்றுக்கு இடையே சிமென்ட் பூச்சுக்கு முன்பு, தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் பைபர் மெஸ்சை சிமென்ட் கலவையினால் பொருத்தி, அதன் பிறகு பூச்சு வேலை செய்தால், வரும் காலங்களில் இது போன்ற விரிசல்களை தடுக்கலாம்.