13 ஜனவரி 2015: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
சரோஜா; அவருக்கு வயது 50, மாதவிடாய் பிரச்னைக்காக, என்னை அடிக்கடி சந்தித்து, சிகிச்சை பெற வருவார். ஆனால், திடீரென்று மாயமானது போல், ஒரு ஆண்டு முழுக்க என்னை சந்திக்க வரவில்லை. நானும் காரணம் தெரியாமல், அவரது உடல்நிலை சரியாகி விட்டது என்று நினைத்து, விட்டுவிட்டேன்.திடீரென்று, ஒருநாள் என்னை சந்திக்க வந்தார். வயிறு இயல்புக்கு மீறி, நான்கு மாத குழந்தை இருப்பது போல், பெரிதாக இருந்தது. சரோஜாவோ, ''நாங்கள் வெகு தொலைவில் வீடு மாறி சென்றுவிட்டோம் டாக்டர். அதனால் உங்களை சந்திக்க வர முடியவில்லை. வயிறு அடிக்கடி வலிக்கிறது,'' என்றார்.வயிற்றை தொட்டுப் பார்த்தேன். ஏதோ பாறாங்கல்லை தொடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. காரணம், அவ்வளவு கடினமாக இருந்தது.புற்றுநோய் கட்டியாக இருக்குமோ என்று சந்தேகித்தோம். புற்றுநோய் கட்டியாக இருந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்ய முடியாது. காரணம், என்ன வகையான கட்டி, அதன் அளவு என்ன, என்பதை பொறுத்துதான், அறுவை சிகிச்சையை தீர்மானிக்க முடியும்.கதிர்வீச்சு மருத்துவரிடம் ஆலோசித்து, காந்த கதிர்வீச்சு பரிசோதனை மற்றும் பல பரிசோதனைகள் செய்தோம். அதன் முடிவு, எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. காரணம், வயிற்றுக்குள் இருந்தது புற்றுநோய் கட்டியல்ல; அடினோமையோசிஸ் எனும் தசைக் கட்டி. அதற்கு, 'டார்ச்சுரஸ்' கட்டி என்ற மற்றொரு பெயரும் உண்டு. அந்த கட்டி கர்ப்பப்பை மட்டுமல்லாது, சரோஜாவின் தொப்புள் வரை ஆக்கிரமித்திருந்தது.உடனே, விரைவாக அறுவை சிகிச்சை மூலம் சரோஜாவின் கர்ப்பப்பை, கருக்குழாய் மற்றும் சினைப்பை, சினைப்பை குழாய் அனைத்தையும் அகற்றிவிட்டோம். அகற்றிய உறுப்புகளையும் மறுபரிசோதனைக்கு அனுப்பினோம். அதிலும், புற்றுநோயல்ல என்று முடிவுகள் வந்தன.'அடினோமைகோசிஸ்' வரும் காரணத்தை, இதுவரை கணிக்க முடியவில்லை. இந்த நோய் தாக்கினால், கர்ப்பப்பையில் உள்ள அணுக்கள் உப்பிவிடும். வயிறு பாறாங்கல் போன்று இறுகிவிடும்.கடுமையான வயிற்றுவலி, மாதவிடாயின் போது, அதிக ரத்தப்போக்கு, கட்டி, கட்டியாக மாதவிடாய் வருவது போன்றவை, கர்ப்பப்பையில், கட்டி இருப்பதற்கான அறிகுறிகள். இன்று, சரோஜா உடல் நலம் தேறி, நன்றாக இருக்கிறார். - மாலதி ரமணி,குடும்பநல மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவர், மாலதி ரமணி கிளினிக்.044 - 2834 1643