உள்ளூர் செய்திகள்

27 மார்ச் 2009: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு

குழந்தைகள் நல மருத்துவத்தை, சிறப்பு பிரிவாக நான் எடுத்த காரணம், குழந்தைகள் என்றால் எனக்கு பிடிக்கும். தினமும் என் துறைக்கு, சிகிச்சைக்காக வரும் குழந்தைகளோடு, உணர்வுபூர்வமாகவும் இணக்கமாகவும் இருப்பது, என் நடைமுறைகளில் ஒன்று.ஆறு ஆண்டுகளுக்கு முன், மார்ச், 27ம் தேதி, நிஹாரிகா என்ற குழந்தையை சந்தித்தேன். மருத்துவ காரணங்களால், அறுவை சிகிச்சையின் மூலம், தாயின் கருப்பையில் இருந்து, குழந்தையை 27 வாரங்களில் எடுத்தோம். குழந்தையின் நிலை பார்க்கவே கவலையாக இருந்தது. காரணம், அவள் எடை வெறும், 640 கிராம் மட்டுமே.நிஹாரிகாவின் தாய்க்கு, சில மருத்துவ ரீதியான பிரச்னைகள் இருந்ததால், நிஹாரிகாவை, குறைமாத குழந்தையாக எடுக்க வேண்டிய கட்டாயம். குழந்தை பிறக்கும்போது, அதன் சராசரி எடை, 3 கிலோ இருக்க வேண்டும்.முப்பத்தேழு வாரத்திற்கு முன்பே குழந்தை பிறந்தால், அது குறை பிரசவம். 37 வாரத்திற்குப் பின் பிறந்தும், எடை குறைவாக இருந்தால், எடை குறைந்த குழந்தையாக கருதப்படும்.குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?தாயின் உடல்நலம் முக்கிய காரணம். தாய் போதுமான ஊட்டச்சத்து சாப்பிடாதவராக இருந்து, கர்ப்ப கால பராமரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும், ரத்த சோகை, உயர்ரத்த அழுத்தம், பிரசவகால நீரிழிவு போன்ற காரணங்களாலும், குறைமாத பிரசவங்கள் எற்படுகின்றன.குறைமாத குழந்தைகளுக்கு, மருத்துவ ரீதியான பிரச்னைகள் நிறைய இருக்கும். நுரையீரல் போன்ற பல உள்ளுறுப்புகள், வளர்ச்சி அடைந்திருக்காது; செரிமான பிரச்னை இருக்கும்; நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும். நோய்த்தொற்று விரைவில் ஏற்பட்டுவிடும்.நிஹாரிகா பிறந்தபோது, மேற்சொன்ன அத்தனை பிரச்னைகளும், அவளுக்கு இருந்தன. இரண்டு மாதங்கள், செயற்கை சுவாச கருவி உதவியோடு அவள் பாதுகாக்கப்பட்டாள். மேலும், ஒரு மாதத்திற்கு ரத்தக்குழாய் வழியாக, ஊட்டச்சத்து செலுத்தப்பட்டது.நிஹாரிகா ஆரோக்கியமான உடல்நிலையை அடைய உதவியது மருத்துவம் மட்டுமல்ல அவளின் குடும்பத்தினரின் கவனிப்பும், கண்காணிப்பும் கூட.குறைமாத குழந்தைகளில் நிஹாரிகாவை, என்னால் மறக்க முடியாது. அடிக்கடி, நிஹாரிகா என்னை சந்திக்க வருவாள். இன்று வெளியூரில் இருக்கிறாள். அவளின் அடுத்த வருகைக்காக, சந்தோஷத்தோடு காத்திருக்கிறேன்.- ஜெ.குமுதா, குழந்தைகள் நல மருத்துவர். பச்சிளம் குழந்தை பிரிவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்