உள்ளூர் செய்திகள்

ஒரு டாக்டரின் டைரி குறிப்பு

தோட்டங்களில் திரியும் தும்பிகளையும், பட்டாம்பூச்சிகளையும் விரட்டிப் பிடிக்கும் வயசு தினேஷுக்கு! அவன் வயதுப் பிள்ளைகள் ஓடியாடிக் கொண்டிருக்க, வீட்டில் முடங்கிக் கிடந்த அவனை, 2009 ஏப்ரல் மாதம் என்னிடம் அழைத்து வந்தனர் அவனது பெற்றோர்.'துாங்கித் துாங்கி வழியுறான். நிறைய டாக்டர்ஸ் பார்த்துட்டாங்க! எல்லாரும், ஏதேதோ சொல்றாங்க. 'பேய் பிடிச்சிருக்குமோ'ன்னு பயந்து, மந்திரிச்சும் பார்த்துட்டோம். என்ன செய்றதுன்னே தெரியலை!' விரக்தியாய் பேசினார் தினேஷின் தந்தை ராஜேந்திரன். தினேஷின் முகத்தைப் பார்க்கவே வேதனையாக இருந்தது. முகம் வெளிறிப்போய், சுறுசுறுப்பே இல்லாமல் மிகச்சோர்வாக இருந்தான்.சில மரபணு பரிசோதனைகளுக்குப் பின்பு, தினேஷின் பிரச்னை புலப்பட்டது. தினேஷ், 'தாலசீமியா'வால் பாதிக்கப்பட்டிருந்தான். இது, குழந்தைகளுக்கு பிறவிலேயே ஏற்படும் ஒரு வகையான ரத்தசோகை நோய். தாலசீமியா பாதிப்பால், ரத்தத்தில் 'ஹீமோகுளோபின்' அளவு குறைந்து விடும். நுரையீரலில் இருந்து, மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதில் தடை ஏற்படும். இதனால், மாதாமாதம் உடலில் ரத்தம் ஏற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ரத்தம் ஏற்றுவதால், பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படும்.உதாரணத்திற்கு, ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரிப்பால் மஞ்சள் காமாலை ஏற்படும். மந்தபுத்தி உருவாகும். எப்போதும், துாங்கிக் கொண்டே இருக்கத் தோன்றும். சுருக்கமாக சொல்வதென்றால், சராசரி வாழ்க்கை வாழும் வாய்ப்பு இவர்களுக்கு இருக்காது!இந்த கொடிய நோய் வரக்காரணம், ஊட்டச்சத்து குறைபாடோ அல்லது தீய பழக்க வழக்கங்களோ இல்லை; காலங்காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் எண்டோகேமி எனப்படும் அக மண முறைதான்! சொந்தத்திற்குள் திருமணம் செய்வதால் ஏற்படும் குரோமோசோம்களின் மாறுபாடு தரும் குறைபாடுகளே, இந்நோய்க்கான மூலகாரணம்.'மாசம் தவறாம தினேஷுக்கு ரத்தம் ஏத்துறோம். ஆனா, பக்கவிளைவுகளால் அவன் ரொம்ப சிரமப்படுறான் டாக்டர்' என, கண்கலங்க இன்று ராஜேந்திரன் சொன்னபோது, என்ன ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. மருத்துவத்திற்கு அப்பாற்பட்ட இறைசக்திதான், தினேஷை குணப்படுத்த வேண்டும் என்று, மனதிற்குள் வேண்டிக் கொண்டேன்.- டாக்டர் இசபெல்லா,ரத்த நோய் நிபுணர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்