உள்ளூர் செய்திகள்

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - ஆயுள் கூட்டும் அதிசயம்!

ஹெச்.ஐ.வி., என்பது, 'ஹியூமன் இம்மியூனோடெபிஷியன்சி வைரஸ்' எனும் கிருமியால் ஏற்படுகிறது என்பது, அனைவருக்கும் தெரியும். கடந்த, 1985ல், சென்னை மருத்துவக் கல்லுாரியில், டாக்டர் சுனிதி சாலமன், ஹெச்.ஐ.வி., கிருமியை முதன் முதலில் கண்டறிந்தார்.நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும், 'டி4' எனப்படும் வெள்ளை அணுக்களை, ஹெச்.ஐ.வி., கிருமி அழித்து விடுவதால், எய்ட்ஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு, காசநோய் உட்பட, அனைத்து நோய்களும் எளிதாக தொற்றி விடும்; தடுப்பு மருந்துகளும் பலன் தருவதில்லை.தமிழகத்தில், சென்னை, கரூர், நாமக்கல் மாவட்டங்களில், எய்ட்ஸ் பாதிப்பு அதிகம். ஹெச்.ஐ.வி., பாதிப்பிற்கு, 'ஆன்டி ரிட்ரோ வைரல்' எனப்படும், கூட்டு மருந்து சிகிச்சை ஒன்று தான் ஒரே தீர்வாக இருந்தது. இது, 10 மருந்துகளின் கூட்டு சிகிச்சை. ஹெச்.ஐ.வி., பாதித்த நோயாளிகள், தினமும் தவறாமல், இந்த, 10 மாத்திரைகளை சாப்பிட வேண்டும். இந்த மருந்தை சாப்பிடுவதால், பக்கவிளைவுகளும் அதிகமாகவே இருக்கும். எங்கள் மையத்தில் செய்த ஆராய்ச்சியில், புதிதாக ஒரு மாத்திரையை உருவாக்கி உள்ளேன். இந்த மாத்திரையை, கடந்த, 10 ஆண்டுகளாக, நோயாளிகளுக்குத் தருகிறோம். ஏற்கனவே நடைமுறையில் இருந்த, 10 மருந்துகளின் கூட்டு சிகிச்சையைக் காட்டிலும், இது நல்ல பலனைத் தந்துள்ளது. தினமும் இந்த மாத்திரையை தவறாமல் சாப்பிடும்போது, நம் உடம்பில் உள்ள, நோய் எதிர்ப்பு அணுக்களை அழிக்கும், ஹெச்.ஐ.வி., கிருமிகளின் வீரியம், வெகுவாகக் குறைந்து உள்ளது. இதனால், தொற்று நோய் தாக்குவதும் வெகுவாகக் குறைந்து விட்டது. ஹெச்.ஐ.வி., வைரஸ் கிருமி தொற்றால் ஏற்படும் உடல் கோளாறுகள், புதிதாக நான் கண்டுபிடித்த மருந்தை சாப்பிடுவதால், இல்லை. ஹெச்.ஐ.வி., பாதித்தவருக்கு, உடல் ரீதியில் வெளியில் தெரியும் அறிகுறிகளும் தெரிவதில்லை. ஒரு நோயாளி, தினமும், 10 மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என சொல்லும் போது, குறிப்பிட்ட காலத்திற்கு பின், ஒரு அயர்ச்சி வருவது மனித இயல்பு. ஆனால், புதிய சிகிச்சையில் ஒரே ஒரு மாத்திரை தான் என்பதால், நோயாளிகளுக்கு, மன ரீதியாக, பெரிய ஆறுதல் கிடைத்துள்ளது.ஹெச்.ஐ.வி., கிருமி பரவுவதற்கான முக்கிய காரணம், பாதுகாப்பற்ற உடலுறவு. தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், இந்த புதிய மாத்திரையை, தினமும் எடுத்துக் கொள்ளும் போது, உடலுறவின் மூலமும் அவரிடம் இருந்து, மற்றவருக்கு நோய்த்தொற்று பரவுவதில்லை. அதேபோல, ஹெச்.ஐ.வி., பாதித்த கர்ப்பிணி பெண், தவறாமல் மாத்திரை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தை, ஹெச்.ஐ.வி., தொற்று இல்லாமல் பிறக்கிறது.அதனால், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை இரண்டிற்கும் இந்த புதிய மருந்து பலன் தருகிறது. தினமும் வழக்கமாகச் சாப்பிடும் சத்தான உணவு, உடற்பயிற்சியோடு, இந்த மாத்திரையும் எடுத்துக் கொண்டால், சராசரி ஆயுளுடன், எய்ட்ஸ் பாதித்தவரும் வாழ முடியும். மாதத்திற்கு, 1,300 ரூபாய் செலவாகும் இந்த மாத்திரை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கிறது.டாக்டர் என்.குமாரசாமி தலைமை மருத்துவ அதிகாரி, ஒய்.ஆர்.ஜி.கேர், சென்னை.kumarasamy@yrgcare.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்