உள்ளூர் செய்திகள்

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: தீர்க்க முடியாது... தீர்வு உண்டு!

மரபியல், சுற்றுச்சூழல் என, பல காரணிகளை கூறினாலும், 'ஆட்டிசம்' ஏன் ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. ஆட்டிசம் பிரச்னை உள்ள குழந்தையின் பெற்றோர், புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம், 'இது நோய் அல்ல' என்பது தான். எனவே, குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முடியும்; என்பதைப் புரிய வேண்டும்.இது, பிறவிக் குறைபாடு. இவ்வகைக் குழந்தைகளின் முக்கிய பிரச்னை, சமூக ரீதியில், சகஜமாக தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது. பேச்சு வரவில்லை, புரிந்துக் கொள்ள முடியவில்லை, கற்றுக் கொள்ளத் தெரியவில்லை என, ஏதாவது ஒரு பிரச்னை மட்டும் இருக்காது... பல பிரச்னைகள் சேர்ந்தே வரும். அதனால் தான், 'ஆட்டிசம் குறைபாடு' என சொல்லாமல், 'ஆட்டிசம் ஸ்பெக்ட்ரல் டிஸ்சாடர்' என சொல்கிறோம்.என்னென்ன பிரச்னைகள் குழந்தைகளுக்கு உள்ளதோ, அதை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு நிபுணரிடம் செல்ல வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஆட்டிசம் குழந்தைக்கு பேச்சு வருவதில் சிக்கல் இருப்பது தான் பிரதான பிரச்னை.இக்குழந்தைகள், வீட்டில் யாராவது ஒருவரின் சொல்லுக்கு தான் கட்டுப்படுவர்; அது, பெரும்பாலும் அம்மாவாக இருக்கும். யார் சொல்லுக்கு குழந்தை கட்டுப்படுகிறதோ, அவர்கள், முடிந்த வரை, உணர்வுபூர்வமான பந்தத்தை குழந்தைக்குத் தர வேண்டும்.சித்த மருத்துவத்தில், இக்குழந்தைக்கு நல்ல முறையில் உதவும் மருந்துகள் உள்ளன. பல்வேறு நோய்களைப் போக்கும் வசம்பு... பேச்சை வரவழைக்கக் கூடியது. தவிர, குழந்தைக்குப் பேச்சு வருவதில் சிரமம் இருக்கிறது என தெரிந்தவுடன், கரிசலாங்கண்ணி சூரணத்தை, தேன் கலந்து நாக்கில் தடவலாம்; பாலும், தேனும் கலந்து தடவலாம். முட்டை மஞ்சள் கருவை கருக்கிச் செய்யும், அண்டத் தைலம்... இவை பேச்சு வருவதற்கு உதவும். இவர்களின் இன்னொரு பிரச்னை துாக்கமின்மை. போதிய துாக்கம் இல்லாத நாட்களில், நிலை கொள்ளாமல் இருப்பர். இக்குழந்தைக்கு, பாட்டு, டான்ஸ், விளையாட்டு, மொழி என, ஏதாவது ஒரு பிரிவில் தனிப்பட்ட திறமை இருக்கும். அதைக் கண்டுபிடித்து, பயிற்சி தருவதோடு, அவர்களுக்குப் பிடித்த குறிப்பிட்ட துறையில், முழுமையாக அவர்களை ஈடுபடுத்த வேண்டும். பிடித்த விஷயங்களை செய்வதில், உடல் சக்தி முழுவதும் செலவாகும் போது, துாங்குவதில் பிரச்னை இருக்காது. 'டிவி' மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்த அனுமதிக்காமல் இருப்பது நல்லது. அதிமதுரம், அஸ்வகந்தா, சங்குபுஷ்பம் போன்ற மூலிகைகள் எல்லாம் ஆழ்ந்த துாக்கத்தை தருபவை.நீர்பிரம்மி என்ற மூலிகை, நினைவாற்றலை பெருக்கக் கூடியது என்பது அறிவியல் உண்மை. சீந்தல் கொடி, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கும், துாக்கமின்மையை சரி செய்வதற்கும் உதவும்.இந்த மூலிகைகள் எந்த விதத்திலும் பக்க விளைவைத் தராது என்பதோடு, இக்குழந்தையின் திறனை மேம்படுத்தக் கூடியது. சுயசார்புடன் தன் குழந்தை இருக்க வேண்டும் என்பது தான், இக்குழந்தையின் பெற்றோர் விருப்பமாக இருக்கும். எனவே, அதை மேம்படுத்த தேவையானதை மட்டும் செய்தால் போதும்; சிக்கலான பிரச்னைக்கு எளிமையான தீர்வு அது தான்.டாக்டர் க.வே.அபிராமி,சித்தா சிறப்பு மருத்துவர், சென்னைcosultabirami@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்