உள்ளூர் செய்திகள்

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - வலிமை தரும் ஒற்றைக் கால் தவம்!

இன்று மருத்துவ ஆலோசனைக்கு வந்த நபருக்கு, 86 வயது; புதுச்சேரியில், சொந்தமாக தொழில் செய்கிறார். இவர், தினமும் அரை கிலோ மீட்டர் துாரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டவர்; தானே டூ - வீலர் ஓட்டிச் செல்வார். வயதை, ஒரு பிரச்னையாக நினைத்து, மற்றவர்களை சாராமல், கடைசி வரை, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர். கடந்த மூன்று வாரங்களாக, நடைப் பயிற்சியை செய்ய முடியவில்லை; மூட்டுகளில் வலி இருப்பதாக சொன்னார்.இந்த வயதில், பொதுவாக வரும் பிரச்னை இது.குறிப்பிட்ட வயதிற்கு மேல், மூட்டுகளில் வலி, எலும்புகள் வலு இழப்பதற்கு, போதுமான உடற்பயிற்சி இல்லாதது, வைட்டமின், 'டி' சத்து குறைபாடு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகளுக்கு நீண்ட நாட்கள் எடுக்கும் மருந்துகள், வலி நிவாரணிகள் பயன்படுத்துவது போன்றவையும், காரணங்களாக இருக்கலாம்.குறிப்பிட்ட வயதிற்கு மேல், அடிக்கடி தவறி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்; இதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டியதும் அவசியம். மூட்டுகளில் தேய்மானம், எலும்புகள் வலுவிழப்பதைத் தவிர, பார்வை குறைபாடு, கால்சியம் சத்து குறைவது, நரம்பு மண்டலப் பிரச்னைகள் என, இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.தினமும், ஒற்றைக் காலில், ஒவ்வொரு காலிலும், 30 வினாடிகள், குறைந்தது மூன்று முறை நிற்பது, எலும்புகளை பலப்படுத்தி, கால்களின் வலிமையை அதிகப்படுத்தும்; கீழே விழுவதற்கான அபாயம், 10 மடங்கு குறையும்; விழுந்தாலும் எலும்பு உடையாது.ஆண்டிற்கு ஒரு முறை, எலும்புகளின் வலிமையைக் கண்டறிவதற்கான பரிசோதனையை செய்து கொள்ளலாம். தசைகளுக்கு தேவையான பயிற்சியை கொடுத்தால் மட்டுமே, எலும்புகள் வலிமை பெறும்.உட்காரும் போது, ஒரு சில தசைகள் வேலை செய்யும்; நிற்கும் போது, இன்னும் கூடுதலான தசைகள் வேலை செய்யும்; நடக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் போது, எல்லா தசைகளும் வேலை செய்யும். தசைகள் அனைத்தும், எலும்புகளுடன் இணைந்திருக்கும். தசைகள், நன்கு வேலை செய்யும் போது, எலும்புகள் வலிமை பெறும்.கால்சியம், புரதம் நிறைந்த உணவுகள், வைட்டமின், 'டி' சத்திற்காக சூரிய ஒளியில் நிற்பது, சைக்கிள் ஓட்டுவது, நடை பயிற்சி, ஏரோபிக்ஸ் போன்ற எளிமையான விஷயங்களை தினமும் பின்பற்றினாலே, பிரச்னைகளை தவிர்க்க முடியும்.டாக்டர் ஏ.பி.கோவிந்தராஜ்,எலும்பு, மூட்டு சிறப்பு மருத்துவர், எம்.ஜி.எம்., மருத்துவமனை, சென்னை.044 - 4527 2727


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !