கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - புதிய பழக்கம், மறதிக்கு மருந்து!
'டிமென்ஷியா' என்பது நோய் கிடையாது. வயோதிகத்தில் வரக்கூடிய உடல் மாற்றங்களில் ஒன்றான மறதி பிரச்னை. 60 வயது வரை மூளையை நன்றாக பயன்படுத்தியவர்கள், சட்டென்று ஒரு சோம்பலான வாழ்க்கை முறைக்கு மாறும்போது, சுறுசுறுப்பாக இயங்கிய மூளை சுருங்க துவங்கும்; மூளையின் செயல்பாடுகள் குறையத் துவங்கும். இது தான் மறதிக்கான அடிப்படை. அதுபோன்று, உடலில் எந்த உறுப்பையும் பயன்படுத்தாமல் இருந்தால், தசைகளும் இறுகிப் போய்விடும்.இந்த நியதி மூளைக்கும் பொருந்தும். பயன்படுத்தும் வரைக்கும் நம் கட்டுப்பாட்டில் இருந்த மூளை, மெதுவாக, செயல்பாட்டை குறைத்துக் கொள்ளும். டிமென்ஷியா என்பது பொதுவான வார்த்தை.இதில் லேசான, மிதமான, தீவிர மான என்று மூன்று நிலைகள் உள்ளன. லேசான மறதி நிலையில், மிக சமீபத்தில், அன்றைய தினம், முந்தின நாள், நடந்த விஷயங்கள் மட்டும் நினைவில் இருக்காது. அதாவது, நேற்று, முந்தின நாள், இன்று நடப்பது என்று...அதற்கு முன் நடந்ததெல்லாம் நினைவில் இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்த புதிதில் நடந்தது, குழந்தை பருவத்து சம்பவங்கள், பால்ய நண்பர்கள் தொடர்பான தகவல்கள் என, பழைய நினைவுகள் எல்லாம், அப்போது தான், நடந்ததைப் போல விவரிப்பதால், மறதி பிரச்னை இருப்பதை கண்டுபிடிப்பது மிக சிரமம்.மிக துல்லியமாக கவனித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இதற்கு அடுத்த நிலையில், மிதமான மறதி பிரச்னை. இன்னும் கொஞ்சம் பின்னாடி போய், ஆறு மாதங்கள், ஓர் ஆண்டிற்கு முன் நடந்தது எல்லாம் மறந்து விடும். தீவிர டிமென்ஷியா நிலையில், எல்லா விஷயங்களும் மறந்து, குழந்தை போல மாறிவிடுவர். அவர்கள் கற்றுக் கொண்ட எல்லா விஷயங்களும் மறந்து விடும்.கார் ஓட்டக் கற்றவர்கள், தீவிர நிலையில், டிரைவிங் சீட்டில் அமர்ந்து ஸ்டீயரிங்கை பிடித்தபடி இருப்பர்; ஓட்டத் தெரியாது.எப்படி கண்டுபிடிப்பது?அன்றாட செயல்களில், உடன் நெருக்கமாக இருந்து பார்த்தால் மட்டுமே, ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும். இத்தனை ஆண்டுகளாக வைக்கும் கண்ணாடியைத் தேடுவது, கதவை தாழ்பாள் போட மறப்பது, குழாயை திறந்து விட்டு மூடாமல் வருவது, கடைக்கு அனுப்பினால் சொன்ன பொருளை வாங்காமல் வேறு பொருள் அல்லது எதுவும் வாங்காமல் வருவது, செருப்பு போட மறப்பது, அல்லது போன இடத்தில் விட்டு விட்டு வந்து விடுவது, செலவழித்த பணத்திற்கு கணக்குத் தெரியாமல் இழப்பது... இப்படி அந்தந்த நிமிடத்தில் செய்யும் வேலைகளில் ஏற்படும் மறதி, ஆரம்ப நிலை அறிகுறியாகும்.தடுப்பது எப்படி?ஐம்பது வயது வரை, ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளைச் செய்ய முடியும். 60 வயதிற்குப் பின், அது புதிய மொழி, இளம் வயதில் செய்ய விரும்பி, செய்ய முடியாமல் போன விஷயம் என்ற எதோ ஒன்றை, புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும்.வயது ஆக ஆக பொருளாதாரம், உறவுகள் தொடர்பான பல விஷயங்கள், மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மனசோர்வு ஏற்படுவதும் மறதிக்கு ஒரு காரணம்.தனியாக இருப்பதை தவிர்த்து, காலை, மாலை என இரு வேளையும் நடைப்பயிற்சி செய்வது, இளம் வயதினருடன் நேரம் செலவிடுவதுடன், தன் அனுபவங்களை கூறலாம். புதிய விஷயங்களை இளைஞர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.எதுவுமே செய்ய முடியாவிட்டால், குறைந்தபட்சம் இடது கையால் பல் விலக்கிப் பழகலாம். புதிதாக ஏதாவது செய்யும் போது, மூளையின் இயக்கம் நன்றாக இருக்கும்.டாக்டர் என்.லட்சுமிபதி ரமேஷ்,முதியோர் நல சிறப்பு மருத்துவர், சென்னை.geriramesh14@gmail.com