உள்ளூர் செய்திகள்

எப்போதும் ஆக்டிவ்வாக இருங்க; மறதி நெருங்காது

'என் உறவினர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த பாதிப்பு ஏன் வருகிறது; தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் என்ன?' என, ஆனைமலையைச் சேர்ந்த, வசந்தராஜ்; சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த ராஜசேகர் என, இரண்டு பேர் கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்த கேள்வியை, சென்னை அரசு பொது மருத்துவமனை நரம்பியல் துறைத் தலைவர் பானுவிடம் ஒப்படைத் தோம். 'ஆக்டிவ் ஆக இருங்கள்; போதும்' என்கிறார் அவர். என்னதான் சொல்றார்... அவர் சொல்றதை படிங்க...மறதி நோய் என்பது, பொதுவாக வயதான காலத்தில் ஏற்படும் நோய். 65 வயதுக்கு மேல் வரலாம்; 90 வயதுக்கு மேல், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதை, 'அல்சீமர்' என்கிறோம். வயதாகிவிட்டது என, பலர் வீடுகளில் முடங்கி விடுகின்றனர். இது, மறதி நோயை அதிகரிக்கும். அதனால், வீட்டிற்குள் முடங்கி விட வேண்டாம்.வயதானாலும், புத்தகங்கள் படித்தல், மற்றவர்களுடன் கலந்து பேசுதல், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வருதல், அன்றாட நிகழ்வுகள் குறித்து விவாதித்தல்; பூங்கா, கடைகளுக்கு சென்று வருதல்; இன்னும் சொல்வது என்றால், நடைபயிற்சி மேற்கொள்தல் என, எப்போதும், 'ஆக்டிவ்' ஆக இருந்தால், வயதானாலும், மறதி நோய் பாதிப்பு வருவதை தள்ளிப் போடலாம். வருவதை முற்றிலும் தடுக்க முடியாது; வயதான எல்லாருக்கும் வரும் என்றும் கூற முடியாது.இதுதவிர, தைராய்டு பாதிப்பு, வைட்டமின் பி - 12 பாதிப்பு, மூளையில் கட்டி ஏற்படுதல், மூளையில் ரத்த ஓட்டம் தடைபடுதல், மன அழுத்தம் போன்ற காரணங்களாலும், மறதி நோய் வரலாம். இதுபோன்ற பாதிப்பு உள்ளோர், திரும்பி வர வழி தெரியாமல் தவிப்பர். சட்டையில் பட்டன் சரியாக போடாமல் வருவர்; கையில் கொண்டு வந்த பொருட்களை ஆங்காங்கே விட்டு விட்டு சென்று விடுவர். எங்கு விட்டோம் என, மறந்துவிடுவர்.இரவுநேரங்களில் குழப்பம், உறவுகளை மறந்து போதல் போன்ற பாதிப்புகள், பொதுவாக அவர்களின் வழக்கமான நடவடிக்கைகளில் மாற்ற இருப்பது போன்றவை இதன் அறிகுறிகள்.மறதி உள்ளது, சம்பந்தப்பட்டோருக்கு தெரிந்தும் இருக்கலாம்; தெரியாமலும் இருக்கலாம். ஆனால், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெளிவாக தெரியும். அவர்களிடம் நிலைமையை தெரிவித்து, டாக்டரிடம் அழைத்துச் செல்வது நல்லது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் பாதிப்பை தள்ளிப் போடலாம்.இப்படி நீண்ட விளக்கம் அளித்தார் பானு. வயதாகிவிட்டது என, இனி வீடுகளில் முடங்க மாட்டீங்க தானே...?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !