விதவிதமான டிபன் பாக்ஸ்; விபரீதம் தெரியுமா?
விதவிதமான டிபன் பாக்ஸ்; 'பெட்' பாட்டில்கள் பார்க்க நல்லா இருக்கும்; ஆனால், விபரீதம் தெரியுமா?நாகரிக வளர்ச்சியால், பள்ளிக்கு எவர்சில்வர் டிபன் பாக்சில், சாப்பாடு எடுத்து போன காலம் மலையேறி விட்டது. தற்போது, வண்ண வண்ண பிளாஸ்டிக் டப்பாக்களில் தான், குழந்தைகளுக்கு மதிய உணவை கொடுத்து அனுப்புகிறோம். விதவிதமான, 'பெட்' பாட்டில்களில், குடிநீர் அடைத்து தருகிறோம்.ஏன், நம் வீட்டு பிரிட்ஜ்களில் கூட, வண்ண வண்ண பிளாஸ்டிக் பாட்டில்களில், தண்ணீர் நிரப்பி வைத்து, தேவையான நேரத்தில், 'ஜில்' என, தண்ணீர் குடிக்கிறோம். வண்ண வண்ண டிபன் பாக்ஸ், பாட்டில்கள் எல்லாம் பார்க்க பந்தாவாகத் தான் இருக்கின்றன. ஆனால், இதன் பின்னணியில் உள்ள ஆபத்து பற்றி யாருக்கும் தெரிவதில்லை.விவரம் தெரியாமல், விளையாட்டுத்தனமாக மேற்கொள்ளும், நம் இந்த செயல்பாடு விபரீதத்தை ஏற்படுத்தி விடும் என்கிறார், உணவு நிபுணர் மீனாட்சி. அவர் சொல்வறதை கேளுங்க:கடைகளில் குறைந்த விலை பிளாஸ்டிக் டப்பாக்கள் நிறைய வந்து விட்டன. இவை எல்லாம் தரமானது என, கூற முடியாது. பொதுவாக, பிளாஸ்டிக்குகளில் இருந்து, பி.பி.ஏ., (பிஸ்பீனல்-ஏ- bisphenol-a) எனப்படும், வேதிப்பொருள் உருவாகும். இது, 'ஹார்மோன்' பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பு சார்ந்த பிரச்னைகளை உருவாக்கும்.தொடர்ந்து பயன்படுத்துவதால், எடை கூடும், நீரிழிவு பாதிப்பு வரும். குறைந்த வயதிலேயே, பெண்கள் பூப்பெய்தி விடவும் வாய்ப்புள்ளது. 'பெட்' (பாலி எத்திலின் டேரப்தலேட்) பாட்டில் என்கிறோம். இதில், 'டை- எத்தில் - ஹைட்ரக்சில் அமைன் (டேகா) என்ற ரசாயனப் பொருள் கலந்துள்ளது. இது, புற்றுநோய்க்கான வேதிப்பொருள். பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாலும், வெந்நீரை ஊற்றி வைத்து பருகுவதாலும், 'டோகா' தண்ணீரில் கலந்து, உடலுக்குள் செல்கிறது; இதுவும் ஆபத்தே. 'பி.பி.ஏ., பாதிப்பு இல்லாத, உணவுப் பொருட்களை வைத்தால், சூடாகாத பிளாஸ்டிக் டப்பாக்கள் (புட் கிரேடு) பயன்படுத்த வேண்டும். டப்பா, பாட்டில்கள் வாங்கும்போது, இதுபற்றிய குறிப்புகள் உள்ளதா என, பார்த்து, தரமானதாக வாங்க வேண்டும்.இவ்வாறு, மீனாட்சி கூறினார்.'கடைகளில், பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கும் போது, அந்தப் பாட்டில்களின் அடிப்பகுதியில் உள்ள முக்கோணமும், அதன் உள் ஒரு எண்ணும் பொறிக்கப் பட்டு இருக்கும். அந்த எண் ஐந்துக்கு மேல் இருந்தால் மட்டுமே, பாட்டில்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். 'யூஸ் அன் த்ரோ' பாட்டில்களில் ஒன்று என்ற எண்தான் இருக்கும்; மீண்டும் பயன்படுத்தக்கூடாது என, வலியுறுத்தப்படுகிறது. 'பிளாஸ்டிக்' பாட்டில்களால் ஆபத்து, அதில் அடைக்கப்பட்டுள்ள தண்ணீருக்கு இல்லை; நமக்குத்தான் என்பதை உணர வேண்டும்.