கிரீன் டீ உடல் எடையை குறைக்குமா?
ஆரோக்கியத்தை பற்றி பேசுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற டாக்டரோ, ஊட்டச்சத்து நிபுணரோ அவசியம் இல்லை என்று ஆகிவிட்டது. 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தை திறந்து, 'ஹெல்த்' என்று தேட ஆரம்பித்தால் போதும்... 40 லட்சத்திற்கும் அதிகமான, 'போஸ்ட்' வந்து விழும்.'வெல்னெஸ்' என்று டைப் செய்தால், 1 கோடிக்கும் அதிகமாக போஸ்ட்டுகள் இருக்கிறது. 'ஹெல்த்தி' என்று அடித்தால், 2 கோடியை நெருங்குகிறது போஸ்ட்டுகள். 'ஹெல்த்தி லிவிங்' என்றால், 3 கோடிக்கும் மேல் பார்க்கலாம்.ஆரோக்கியம் என்றால் ஒல்லியாக இருப்பது என்ற கருத்தும் ஆழமாக வேரூன்றி விட்டது. உடனடியாக உடல் எடையை குறைக்க, கிரீன் டீ உட்பட, பலவற்றையும் சிபாரிசு செய்கின்றனர், இன்ஸ்டாகிராம் ஊட்டச்சத்து நிபுணர்கள்.இவர்களோடு, புதிதாக ஒரு குழுவினர் சமீபத்தில் இணைந்திருக்கின்றனர்; அவர்கள் சமையல் கலைஞர்கள். 'யு - டியூப்'பில் எந்த சமையல் சேனலை எடுத்தாலும், சூடான வாணலியில், சமையல் பொருட்களை போடுவதற்கு முன், அதில் என்ன சத்துக்கள் உள்ளன.எதிர்ப்பு சக்தியை எப்படி தருகின்றன என, நீண்ட விளக்கம் கொடுத்த பின்னரே, சமைக்க துவங்குகின்றனர்.இவை அனைத்திற்கும் பின்னால் இருப்பது, 'ஹெல்த் அண்டு வெல்னெஸ்' என்ற பெயரில் நடக்கும் பன்னாட்டு வர்த்தகம். இதன் மதிப்பு, 4.2 டிரில்லியன் டாலர்கள்; இந்திய மதிப்பில் பல ஆயிரம் கோடிகள். சர்வதேச பொருளாதார சந்தையில் இது, 5.4 சதவீதம்.எப்படி சாத்தியம் ஆனது?இது தான் சரி என்று ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் விடாமல் சொல்லி, மனதில் ஆழமாக பதிய வைப்பது முதல் படி. ஒல்லியாக இருப்பது அழகு, இது எப்படி உடனடியாக சாத்தியம்? கூடவே அதற்கான தீர்வும், கிரீன் டீ வடிவத்தில் வரும். 2019ல், சர்வதேச சந்தையில் கிரீன் டீயின் விற்பனை மட்டும், 18.4 பில்லியன் டாலர்கள். அதாவது சில ஆயிரம் கோடிகள்.தினமும், 3 கப் கிரீன் டீ குடித்தால் போதும். அளவுகோலின் படி, சூப்பர் மனிதனாக ஆகிவிடலாம். கொழுப்பை குறைத்து, சர்க்கரையை கட்டுப்படுத்தி, மூளையின் செயல்திறனை அதிகரித்து, கேன்சர் வராமல் தடுக்கும்.அறிவியல் உண்மை என்ன?கிரீன் டீ கேன்சரை வராமல் தடுக்கும் என்றால், கேன்சர் ஆராய்ச்சியாளர்களும், டாக்டர்களும் இத்தனை துாரம் மெனக்கெடாமல், கோப்பை கோப்பையாக, கிரீன் டீ குடித்து விட்டு, நிம்மதியாக இருக்கலாமே... டீ எந்த விதத்திலும் கேன்சரை தடுக்காது; கொழுப்பு குறையாது. இதை குடிப்பதால், 'மெட்டபாலிசம்' எனப்படும் உடலின் உள் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும் என்பது தான் ஆராய்ச்சிகளின் முடிவு. இது கிரீன் டீயில் மட்டும் இல்லை. பிளாக் டீ, ஒயிட் டீ என்று, உலகில் எத்தனை விதமான தேயிலைகள் உள்ளதோ, அவை அத்தனையும் இதை செய்யும். கிரீன் டீயில் உள்ள, 'தியாபிளவின்' என்ற ஆன்டி ஆக்சிடென்ட், கறுப்பு டீயில் உள்ள, 'கேட்டகின்' என்ற ஆன்டி ஆக்சிடென்டும் சம அளவில் பலன் தரக்கூடியது.