தடுப்பு மருந்துக்கு கட்டுப்படும் உருமாற்றம்!
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் இருந்தே, அதில் ஏற்படும் மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் வைரசில் மரபணு மாற்றம் ஏற்படுவது இயல்பான விஷயம். இன்புளூயன்சா வைரஸ், ஒவ்வொரு ஆண்டும் மரபியல் மாற்றம் அடைவதால், மாற்றத்திற்கு தகுந்த தடுப்பூசி, ஆண்டுதோறும் போட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.ஆனால், அம்மை தொற்றை உண்டு பண்ணும் வைரஸ், இதுவரை எந்த மாற்றமும் அடையவில்லை; அதற்கான தடுப்பூசி ஒருமுறை போட்டால் போதும். கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே, மருத்துவ விஞ்ஞானிகள் குழு, கொரோனா வைரசில் ஏற்படும் மரபணு மாற்றங்களை கவனித்து வருகிறது. தற்போது உள்ள மரபணு மாற்ற வைரஸ், கடந்த செப்டம்பரில் அடையாளம் காணப்பட்டது. மரபணு மாற்ற கொரோனா, எவ்விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அறிய, இன்னும் சில வாரங்கள் காத்திருந்து தான் பார்க்க வேண்டும். உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ், கடந்த நவம்பர் முதல், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றங்கள், உருமாற்றம் ஏற்படுவதற்கு முன் இருந்ததைக் காட்டிலும், அதிக வீரியத்துடன் இருக்கிறது. அதேநேரம் தற்போதுள்ள தடுப்பு மருந்துக்கு கட்டுப்படாது என்று சொல்ல முடியாது.பிரிட்டனில் பரவும் உருமாற்ற வைரசின் மரபணுவில், 22 முறை மரபணு மாற்றம் நடந்துள்ளது. இதுவரை இருந்ததை விடவும், அதிக கவனத்துடன், பொது சுகாதார துறை புதிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். 22 முறை உருமாறிய வைரஸ், தென் ஆப்ரிக்காவில், கூடுதலாக சில மாற்றம் அடைந்து, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதன் வீரியம் எந்த அளவு இருக்கும், தொற்று ஏற்படுத்தும் பாதிப்புகள், ஏற்கனவே தொற்று பாதித்து குணம் அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட, 'ஆன்டிபாடிஸ்' எனப்படும் நோய் எதிர்ப்பணுக்கள், உருமாற்ற வைரசை அழிக்கும் திறன் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்து வருகிறோம். பதில் கிடைக்கும் வரை, கூடுதல் கவனத்துடன், பாதுகாப்பாக இருப்பதைத் தவிர, வேறு வழிஇல்லை.தடுப்பு மருந்து பாதுகாப்பானதா?டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தடுப்பூசி பற்றி பகிர்ந்துள்ள தகவல்:நோய் வராமல் தடுத்து கொள்வதற்கு தான் தடுப்பூசி போடுகிறோம்.பெரும்பாலான தடுப்பு மருந்துகள், தொற்று ஏற்படுவதையும், பல சமயங்களில் தொற்று ஏற்பட்ட பின் வரும் பாதிப்புகளையும் குறைத்து விடும்.தடுப்பூசி போட்டுக் கொள்வதால், தங்களுக்கு தொற்று பாதிப்பு வராது, வந்தாலும் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது என்று நினைக்கின்றனர். இதில் உண்மை இல்லை.நடைமுறையில் உள்ள எல்லா தடுப்பு மருந்துகளும் தொற்று பாதிப்பில் இருந்து, 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்காது.தொற்று கிருமிகளால் நோய் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் விதமாகவே தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸை பொறுத்தவரை, தற்போதுள்ள தடுப்பு மருந்து எந்த அளவிற்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு தரும்,என்று தற்போதைக்கு சொல்ல முடியவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்.டாக்டர் சவுமியா சுவாமிநாதன்,தலைமை மருத்துவ விஞ்ஞானி,உலக சுகாதார மையம், ஜெனிவா.