உள்ளூர் செய்திகள்

சுலபமாக செரிக்கும் வே புரதம்!

தாய்ப்பாலில் 'வே, கேசின்' என்ற இரு விதமான புரதங்கள் உள்ளன. மொத்த புரத அளவில், வே புரதம் 60 - 80 சதவீதம் உள்ளது. கேசின் புரதம் 20 சதவீதம் மட்டுமே உள்ளது. பசும் பாலில், தாய்ப்பாலில் இருப்பதை விட, மூன்று மடங்கு அதிக புரதம் உள்ளது. இதில் தாய்ப்பாலை போன்று இல்லாமல், கேசின் புரதத்தின் அளவு 80 சதவீதம் உள்ளது. இந்த புரதத்தை செரிக்கும் அளவுக்கு குழந்தையின் செரிமான சக்தி இருக்காது. வே புரதம் இரைப்பைக்கு சென்றதும், அமிலத்துடன் பால் கலந்து, எளிதில் செரிக்கும் விதமான தயிர் போன்ற தன்மைக் கு மாறுகிறது. ஆனால், கேசின் புரதம், கடினமான தன்மையில் கெட்டியாக மாறுவதால், எளிதில் செரிமானம் ஆகாது. அத்துடன், சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தையும் இது ஏற்படுத்துகிறது. தாய்ப்பால் குழந்தை பருக ஏதுவாக எல்லா நேரமும் சரியான வெப்ப நிலையில் தயாராக இருக்கும் தாய்ப்பாலில், குழந்தைகளை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் ரத்த வெள்ளை அணுக்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு மூலக்கூறுகள், மூளை வளர்ச்சி, பார்வை திறனுக்கான 'டாரின்' போன்ற அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்களான டி.ஹெச்.ஏ., உள்ளது. பால் பவுடர் குழந்தைகளுக்கான பால் பவுடர் 400 கிராமின் விலை 300 - 800 ரூபாய் வரை விற்கிறது. இது, குழந்தைக்கு 4 - 5 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இதனால், ஒரு மாதத்திற்கு, 3,000 - 6,000ரூபாய் வரையும், 6 மாதங்களுக்கு, 18,000 - 36,000 வரையும் செலவாகிறது. தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு இல்லாதது ஒருபுறம், பல தாய்மார்கள் விபரம் தெரியாமல் பவுடர் பாலை குழந்தைக்கு தருகின்றனர். விலை அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு 8 தடவை தருவதற்கு பதிலாக, 2 - 3 முறை மட்டுமே தருகின்றனர். ஒரு கரண்டி பால் பவுடரை 30 மில்லி சூடு நீரில் கலக்குவதற்கு பதிலாக, அதிக தண்ணீரை சேர்க்கின்றனர். இதனால், தாய்ப்பாலும் இல்லாமல், போதிய பவுடர் பாலும் கிடைக்காமல், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் வளர்கின்றனர். தாய்ப்பால் மட்டுமே தரப்படும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, சுவாச நோய் தொற்றுகளின் பாதிப்பு மிகவும் குறைவு. • முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டும் தர வேண்டும். 2 வயது வரை, இணை உணவுடன் தாய்ப்பாலும் தர வேண்டும். • கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு கடைசி 2 - 3 மாதங்களில், தாய்ப்பால் கொடுப்பதற்காக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயார்ப் படுத்த வேண்டும். • கர்ப்ப காலத்தில், வழக்கத்தை விட அதிகமாக, தினசரி 300 கலோரிகள், 15 கிராம் புரதம் சாப்பிட வேண்டும். பிரசவத்திற்கு பின், கூடுதலாக, 500 கலோரிகள், 25 கிராம் புரதம், தினசரி உணவில் சேர்க்க வேண்டும். • நார்மல் டெலிவரி என்றால், உடனடியாகவும், சிசேரியன் என்றால், ஒரு மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் தர வேண்டும். • தினசரி 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் தர வேண்டும். குழந்தை பால் குடித்தபின், இரண்டு மணிநேரம் துாங்குவது, தினம் 6 - 8 முறை சிறுநீர் கழிப்பது, 3 - 6 முறை மலம் கழிப்பது, 20 - 30 கிராம் என்ற அளவில் தினம் உடல் எடை அதி கரிப்பது, கை, கால்களை உதைத்து விளையாடுவது என்று இருந்தால், தாய்ப்பால் போதுமான அளவு குழந்தைக்கு கிடைக்கிறது என புரிந்து கொள்ளலாம். டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை, குழந்தைகள் நல மருத்துவர்,அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருவள்ளூர் 94444 75309sppillai@yahoo.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்