உள்ளூர் செய்திகள்

பார்வையை பறிக்கும் கண் அழுத்தம்

ஐம்புலன்களில், முக்கியமானது கண், 'கண்ணை இமை காப்பது' என்ற பழமொழியே, கண்ணின் அருமையை உணர்த்தும். கண்ணில் பிரச்னை என்றால், உடனடியாக கவனிக்க வேண்டும்.உடலில், பாய்ந்தோடும் ரத்தத்தில் மட்டும் அழுத்தம் ஏற்படுவதில்லை; கண்ணிலும் ஏற்படுகிறது. அதுவே, கண் அழுத்த நோய். ஆங்கிலத்தில், 'க்ளக்கோமா'. இந்த நோய், முதியோரை மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைகளையும் தாக்கும். நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில், சுரக்கும் நீரின் அழுத்தம் சாதாரண நிலையில் இருந்து படிப்படியாக அதிகரித்து, பார்வை நரம்பினால் தாங்க கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளக்கோமா' பாதிப்பு, தலை தூக்குகிறது.'க்ளக்கோமா'வில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை, மரபு வழி சார்ந்தது. பிறவிலேயே இதன் பாதிப்பு இருக்கும். எனவே, குழந்தை பிறந்ததும், முழு கண் பரிசோதனை செய்வது அவசியம். அந்த பரிசோதனையில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டால், அதன் பாதிப்பை தடுக்கலாம். இரண்டாவது வகை, 'க்ளக்கோமா' யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம் மற்றும் காயங்கள், கண்ணில் சதை வளர்ச்சியினால் ஏற்படும் அழுத்தம் போன்றவற்றாலும் வரலாம்.விழிப்பந்தின் உள்ளே வலி; மற்றும் தாங்கமுடியாத தலைவலியே இதன் அறிகுறி. 40 வயதுக்கு மேல், கண் அழுத்தம் மற்றும் கண் நரம்புகள் பாதிப்பு போன்றவற்றுக்கு, தொடர் பரிசோதனை அவசியம். காரணம், பரிசோதனைகளின் முடிவில், பாதிப்புகள் தெரியவந்தால், சொட்டு மருந்து மற்றும் மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்தலாம். 'க்ளக்கோமா'வால், கண் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தால், அறுவை சிகிச்சை செய்து, பார்வை இழப்பை தடுக்கலாம்.- கா. நமீதா புவனேஸ்வரி, கண் அறுவை சிகிச்சை நிபுணர்இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் அரசு கண் மருத்துவமனை9444288784


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்