சிகரெட்டை நிறுத்தினால் 24 மணி நேரத்தில் மாற்றம் தெரியும்!
இன்று உலகின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களில், புகையிலையும் ஒன்றாக உள்ளது. புகைப் பிடிப்பதாலும் புகையிலை தொடர்பான நோய்களாலும், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு சிகரெட்டும் வெளிவிடும் புகை, நுரையீரல், இதயம், மூளை மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் மெதுவாக பாதிக்கிறது. நுரையீரல் மருத்துவராக, புகையிலையால் ஏற்படும் நோய்களால் மூச்சு விட, நடக்க, துாங்க, நிம்மதியாகப் பேச முடியாமல் சிரமப்படும் நோயாளிகளை நான் தொடர்ந்து சந்திக்கிறேன். அவர்களில் பலர், ஒரு காலத்தில், 'எப்போதாவது தான் புகை பிடிக்கிறேன்; எப்போது வேண்டுமானாலும் இதை நிறுத்த என்னால் முடியும்' என்று நம்பியவர்கள் தான்; இப்போது புகையிலை பழக்கத்தை நிறுத்த முடியாமல் அவதியடைகின்றனர்; பல்வேறு உடல் நலப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். 'புகையிலை' என்றாலே, பொதுவாக சிகரெட்டை மட்டுமே நினைக்கிறோம். ஆனால், சிகரெட், பீடி, சுருட்டு, குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலை, கைனி என்று பல வடிவங்களில் புகையிலை பயன்பாடு உள்ளது. - இ- - சிகரெட்டுகள், 'வேப்பிங்' சாதனங்கள் என்று அனைத்து தயாரிப்புகளிலும் நச்சு ரசாயனமான நிக்கோடின் உள்ளது. புகையிலையில் பாதுகாப்பான வடிவம் என்று எதுவும் இல்லை. குறைவாக புகைப்பிடிப்பது, நண்பர்களுடன் புகைப்பிடிப்பது, வார இறுதியில் மட்டும் புகைப்பிடிப்பது கூட காலப்போக்கில், நுரையீரல், ரத்த நாளங்களை பாதிக்கும். சுத்தமான காற்றை சுவாசிக்கவே உருவாக்கப்பட்டுள்ளது நுரையீரல்; ஆயிரக்கணக்கான தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள, புகையிலையில் உள்ளன. இவை, மென்மையான நுரையீரல் திசுக்களை வீக்கமடையச் செய்து சிதைக்கின்றன. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலர் காலை நேர இருமல், வேலை செய்ய முடியாமல் சோர்வடைவது போன்ற ஆரம்ப கட்ட அறிகுறிகளை, அலட்சியம் செய்கின்றனர். அறிகுறிகள், தீவிரமடையும் போது, நுரையீரலில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டிருக்கும். புகையிலை தொடர்பான நோய்களில் ஒன்று நுரையீரலில் காற்று பாதைகள் குறுகி, வீங்கி, சுவாசிப்பதை கடினமாக்கும் சி.ஓ.பி.டி., இதனால், தொடர் இருமல், அதிக சளி, படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமம், ஓய்வில் இருந்தாலும் தீவிர மூச்சு திணறல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். புகையிலையை மறைமுகமாக சுவாசிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு, அடிக்கடி மூச்சிரைப்பது, தொற்றுகள், வளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன. கர்ப்பிணி சுவாசித்தால், தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காசநோய், மலட்டுத்தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், காயங்கள் மெதுவாக ஆறுவது என, உடல் முழுவதும் புகையிலை ஏற்படுத்தும் பாதிப்புகளை அடுக்கலாம். புகையிலையை நிறுத்திய பின், 24 மணி நேரத்திற்குள் கார்பன் மோனாக்சைடு அளவு குறைகிறது; சில வாரங்களில், சுவாசம் மேம்படுகிறது; சில மாதங்களில் இருமல் குறைகிறது; சில ஆண்டுகளில் இதய நோய், புற்றுநோய் வருவதற்கான அபாயம் குறைகிறது; புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட, உதவி கேட்க தயங்க கூடாது. டாக்டர் பி.மாளவிகா, நுரையீரல் சிறப்பு மருத்துவர், ஐஸ்வர்யா மருத்துவமனை 98401 05510cc@iswarya.in