உள்ளூர் செய்திகள்

அதிகரிக்கும் நினைவாற்றல்

பழங்கள், உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல்வேறு நோய்களையும் போக்கவல்லது. அதில் ஒன்று விளாம்பழம். இது, காய்ச்சல், இருமல், சளி பிரச்னைகளை போக்க வல்லது. வயிற்று கோளாறுகளை சரி செய்து, வாயு பிரச்னையை குணப்படுத்தக் கூடியது. மரத்தின் பட்டை, இலை, பழம் ஆகியவை பயனுள்ளதாக விளங்குகிறது.விளாம்பழத்தின் சதை காயாக இருக்கும்போது துவர்க்கும்; பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த புதுச்சுவையுடன் இருக்கும். மரத்தின் இலைகள், ஒரு பிடி அளவுக்கு எடுத்து, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, காய்ச்சிய பால், சுக்குப்பொடி சேர்த்து தேனீராக பருகி வர, வாயு பிரச்னை நீங்கும். உடல் எரிச்சலை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும்.விளாம்பழத்தின் ஒடு நீக்கி விட்டு, சதையை, ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து, இதனுடன் சுக்குப்பொடி, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால், வயிறு உப்புசம், பசியின்மை, சுவையின்மை, ஈரல் பாதிப்பு ஆகியவை நீங்குகிறது. பித்த சமனியாக விளங்கி, செரிமான கோளாறுகளை சரி செய்யும். பசியை தூண்டக்கூடிய அருமருந்தாக இப்பழம் விளங்குகிறது.மரத்தின் இலையை நன்றாக அரைத்து பூசுவதால், அம்மை, அக்கி கொப்புளங்கள், வியர்குரு விலகி, தோல் ஆரோக்கியம் பெறும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழம் விளாம்பழம், ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. விளாம்பழத்தில் வைட்டமின் பி2, கால்சியம் அதிகமாக இருப்பதால், பல், எலும்புகளை வலுடைய செய்கிறது. தயிருடன் விளாங்காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால், வாய்ப்புண், அல்சர் குணமடையும்.வெல்லத்துடன், விளாம்பழத்தை கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி விரைவில் குணமடையும். பனங்கற்கண்டை சாப்பிட, பித்தக் கோளாறால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல் நீங்கும். தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தை கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள் பட்ட பேதி சரியாகும்.இம்மரத்தின் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும். மரப்பட்டையை பொடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு ஆகியவை குணமாகும். சர்க்கரையுடன் விளாம்பழத்தை பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும், நன்கு பசிக்கும்.விளாம்பழத்துக்கு, ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்புக்கு, விளாம்பழம் நல்ல மருந்து. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து, 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். விளாம்பழச் சதையுடன் தேன், திப்பிலி தூள் சேர்த்து சாப்பிட்டால், விக்கல், மேல் மூச்சு வாங்குதல் போன்றவை சரியாகும். பழத்தை மட்டும் சாப்பிடுவதால், வாயில் நீர் ஊறல், வாய்ப்புண், ஈறு சம்பந்தமான நோய்கள் நீங்கி நன்றாக பசி ஏற்படும். பிரசவமான பெண்கள், விளாம்பழத்தை கூழாக்கிக் குடித்து வந்தால், உள்ளுறுப்புகள் பலம் பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்